கடற்கரையில் அனுமதி இல்லை.. சுற்றுலா தலங்கள் மூடல்
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.. ஏப்ரல் 20-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் , சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம் ,மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
சுற்றுலா தலங்கள் மூடல்
- நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.
- தமிழகத்தில் அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
- உயிரியல் பூங்காக்கள், பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.