மேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்

 


மேற்கு வங்கத் தேர்தல் 'கணிப்பு' தொடர்பாக பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ தேசிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரசாந்த் கிஷோரும் விளக்கம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக அதிகாரபூர்வமாக வியூகம் வகுத்து வருகிறார் பிரசாந்த் கிஷோர். அவரின் ஆலோசனைப்படிதான் அங்கு மம்தாவின் அத்தனை செயல்பாடுகளும் இருந்து வருகின்றன.

இந்நிலையில் `பாஜகதான் மேற்கு வங்கத்தில் வெற்றி பெறும்' என்று பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ ஒன்று புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளவர், பாஜக ஐ.டி விங் தலைவர் அமித் மால்வியா.

பிரசாந்த் கிஷோர் பேசிய அந்த ஆடியோ 'க்ளப் ஹவுஸ்' (Clubhouse) என்ற சாட் செயலியில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து இருக்கும் பிரசாந்த் கிஷோர், "இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தூக்கி எரியப்படும். திரிணாமுல் நடத்திய சர்வேயில் பாஜகவுக்கு ஆதரவு அலை இருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சம அளவில் பிரபலமாக உள்ளனர். நாடு முழுவதும் மோடியைச் சுற்றி ஒரு வழிபாட்டு முறை உள்ளது. மோடியைக் கடவுளாகப் பார்க்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் உள்ளனர். இதுதான் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரபலமாக இருக்க காரணம். இது ஒரு காரணி.

கடந்த 30 ஆண்டுகளில் பார்த்திராத ஒன்றை பாஜக செய்யும் என்று மக்கள் நினைக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் மீது கோபம் இருக்கிறது. அது ஒரு காரணி. மம்தா பானர்ஜி மீது மேற்கு வங்க மக்கள் மத்தியில் கோபம் உள்ளது. இந்தக் கோபம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீதான 10 ஆண்டு அதிருப்தி காரணமாக வந்தது.

இதேபோல் மற்றொரு காரணி வெற்றியை தீர்மானிக்கும். அது, ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் இஸ்லாமிய ஆதரவு அரசியல். திரிணாமுலின் இஸ்லாமிய ஆதரவு காரணமாக பட்டியலின வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாக செல்லும். மேற்கு வங்கத்தில் மோடியின் ஆதரவு தளத்தில், முக்கியமானது இந்தி பேசும் மக்கள்தொகை. இங்கு இந்தி பேசுவோர் ஒரு கோடி பேர்.

இவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம். இதேபோல் மாதுவா சிறுபான்மையினரில் 75% பேர் பாஜகவுக்கு வாக்களிக்கலாம். மேலும் மூன்றாவது கூட்டணியாக இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணிகளுக்கு வாக்களிப்பவர்களில் 10 - 15% பேர் பாஜகதான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று கருதி அக்கட்சிக்கு வாக்களிக்கலாம். மேற்கு வங்கத்தில் வாழும் 50 - 55% இந்துக்களின் ஆதரவு பாஜகவுக்குதான் உள்ளது. இதேபோல் திரிணாமுல் காங்கிரசில் இருந்து சுவேந்து ஆதிகாரி வெளியேறியது இந்தத் தேர்தலில் சிறிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று அவர் பேசிய அந்த ஆடியோ பதிவில் இருக்கிறது.

பிரசாந்த் கிஷோர் பேசிய இந்த ஆடியோவை வெளியிட்ட அமித் மால்வியா, "பொதுவெளியில் பேசுகிறோம் என்பதை உணர்ந்து பிரசாந்த் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆய்வில் கூட பாஜக வெற்றி பெறுகிறது என்பதை வெளிப்படையாக கூறி ஒப்புக்கொண்டுள்ளார்" எனக் கூறியிருந்தார்.

பிரசாந்த் கிஷோரின் பதில் என்ன?

பாஜகவின் கூற்றுகளுக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், ``பாஜக தலைவர்கள் எனது பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! பாஜக தைரியத்துடன், நான் பேசிய முழுப் பகுதியின் ஆடியோவையும் வெளியிட வேண்டும். மாறாக, நான் பேசிய சிறிய பகுதிகளை மட்டுமே வெளிப்படுத்தி உற்சாகமடைய வேண்டாம். இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். மேற்கு வங்கத்தில் பாஜக 100 இடங்களை தாண்டாது" எனக் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து 'இந்தியா டுடே'-விடம் பேசிய பிரசாந்த் கிஷோர், முழு ஆடியோ பதிவையும் வெளியிடுமாறு பாஜகவுக்கு சவால் விடுத்தார். மேலும் "நான் சொன்னதில் தவறில்லை. அந்த உரையாடலில் பாஜக 100-ஐ தாண்டாது என்றும் நான் சொன்னேன், அவர்கள் ஏன் அதை வெளியிடவில்லை? எனக்கு முழு அறிவு இருந்தது, அது ஒரு பொதுத் தளம் என்று தெரிந்துதான் பேசினேன்" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்