தந்தை, மகன்களை பட்டாசு விபத்தில் பறிகொடுத்த தாய்: ரயில் முன் பாய்ந்து தற்கொலை -வேலூரில் சோகம்

 


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையம் அருகில் தனது மகள் வித்யா பெயரில் பட்டாசு கடை நடத்தி வருபவர் மோகன் (60). இவர் கடந்த 18ம் தேதி தனது பேரக் குழந்தைகள் தனுஷ் (8) மற்றும் தேஜஸ் (7) உடன் வழக்கம் போல் கடைக்கு சென்றிருக்கிறார்.

இந்நிலையில், மதியம் 12.00 மணி அளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் பட்டாசை வெடித்து காண்பிக்கச் சொன்னதால் மோகன் பட்டாசை வெடித்துள்ளார். அதில் ஏற்பட்ட தீப்பொறி கடையில் உள்ள பட்டாசுகள் மீது விழுந்து வெடிக்கத் தொடங்கியுள்ளது.

அப்போது மோகனின் பேரன்கள் இருவரும் பயத்தில் கடைக்குள் ஓடியிருக்கிறார்கள். கடைக்குள் ஓடிய பேரன்களை காப்பாற்ற முயன்ற போது மோகனும் பட்டாசு தீயில் சிக்கியுள்ளார். அதற்குள் பட்டாசுகள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டதால் மோகன் மற்றும் அவரது மகள் வழி பேரக் குழந்தைகள் இருவர் என மூவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து இறந்த சிறுவர்களின் தாயார் வித்யா (34) தந்தை மற்றும் மகன்களை பறிகொடுத்ததில் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் வித்யா வீட்டில் இல்லாததால் பதற்றமான உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

அப்போது லத்தேரி ரயில் நிலையம் அருகே பெண் சடலம் இருப்பதாக பொது மக்கள் கூறியதை அடுத்து உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்து கிடப்பது வித்யா என தெரியவந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த ஜோலார்பேட்டை இரயில்வே காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு மகன்களும், தனது தந்தையும் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் மனவேதனையில் இருந்த வித்யா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. மேலும் வித்யா தனது கணவரை பிரிந்து மகன்களுடன் தனது தந்தை மோகன் வீட்டில் வசித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)