வீரசிகாமணி முதல் கொடியன்குளம் வரை

 


1995 ஜூலை 26 - திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி - சுரண்டை பேருந்தில் ஓட்டுநர் தங்கவேலு (வயது 53) சாலையில் வழிவிடாமல் சென்ற மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பேருந்து சுரண்டையில் இருந்து புளியங்குடி திரும்பி வரும்போது வீரசிகாமணி என்ற இடத்தில் நடுவக்குறிச்சி கிராமத்தின் மாணவர்களும், இளைஞர்களும் சேர்ந்து பேருந்தை மறித்து ஓட்டுநர், நடத்துநர் இருவரையும் தாக்கினர். இதில் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். ஓட்டுநர் தங்கவேலு நடுவக்குறிச்சி கிராமத்தின் அருகிலுள்ள வடநத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

ஓட்டுநர் தங்கவேலு தாக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு வடநத்தம்பட்டியைச் சேர்ந்தவர்கள் வீரசிகாமணி பகுதிக்கு திரண்டு வந்தனர்.

வீரசிகாமணியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கிருந்த தலைவர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது.

சங்கரன்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சின்னையன் தலைமையிலான காவல்துறையினர் வடநத்தம்பட்டி கிராமத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியதாக நடுவக்குறிச்சி கிராமத்தின் 15 பேர் மீதும், 

வீரசிகாமணி சிலை சேதம், கத்திக் குத்து சம்பவத்திற்காக வடநத்தம்பட்டி கிராமத்தின் 18 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த சம்பவங்கள் 1995 தென் மாவட்ட சாதி மோதலின் தொடக்கமாக அமைந்தது.

வீரசிகாமணியில் சிலையை சேதப்படுத்தியவர்களைக் கைது செய்யக் கோரி நடந்த போராட்டங்களால் அடுத்த மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் கடைகள் திறக்கப்படவேயில்லை.

1995 ஜூலை 29 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வி.கே. ஜெயக்கொடி தலைமையில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

தங்கள் கிராமத்தில் தாக்குதல் நடைபெற்றதாலும், சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் பலர் துன்புறுத்தப்படுவதாகவும் கூறி ஒரு தரப்பினர் கூட்டத்தைப் புறக்கணித்தனர். மற்றொரு தரப்பினர் கோரிக்கை ஏற்கப்பட்டு சிலையை அரசு தரப்பில் சீரமைத்து தருவதற்கு ஆட்சியர் ஒப்புதல் தெரிவித்தார்.

ஆனால், 1995 ஜூலை 30 மறுநாளும் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. பல இடங்களில் கடைகள் திறக்க முடியவில்லை.

காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தமிழக அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

கண்டன போஸ்டர்களில் இழிவான வார்த்தைகள் இடம்பெற்றன. சிலை அவமதிப்பைக் கண்டித்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஜூலை 31 அன்று திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகே ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இறந்தவரின் தரப்பினர் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் புகுந்து எதிர்தரப்பினரின் கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலியில் கடைகள் நொறுக்கப்பட்டதைக் கண்டித்து தென்காசியில் பேருந்துகள் மறிக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்றது. சிவகிரி பகுதியில் ஒரு தலைவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. 

சிவகிரியில் தலைவர் சிலை சேதத்திற்கு காரணமென்று கூறி எதிர்தரப்பின் மூவர் மீது தாக்குதல் நடந்தது.

தங்கள் தரப்பினரைத் தாக்கியதைக் கண்டித்து வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ.வின் மண்ணெண்ணெய் குடோன் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

ஜூலை 30 சிவகிரியில் நடந்த காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏழு பேர் காயமுற்றனர்.

பாவூர்சத்திரம் பகுதியில் ஒரு தலைவர் சிலை சேதப்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, வெள்ளாளங்கோட்டை பகுதியில் பலர் மீது தாக்குதல் நடைபெற்றது.

பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறை மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது.

1995 ஆகஸ்ட் 5 அன்று கயத்தாறு தாக்குதலைக் கண்டித்து புளியம்பட்டியில் ஒரு வீடும், சீவலப்பேரி பகுதியில் ஒரு வீடும் எதிர் தரப்பினரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

சீவலப்பேரி பகுதியில் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக திருவைகுண்டம் பகுதியில் ஆகஸ்ட் 25 அன்று பலவேசம் என்பவர் உயிரோடு தீ வைத்துக் கொல்லப்பட்டார். அவரது மனைவி உயிர் தப்பினார்.

பல இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. வாகனங்கள், கடைகள் தாக்கப்பட்டன.

பலவேசம் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, ஆகஸ்ட் 25இல் சிங்கத்தாக்குறிச்சி கிராமத்தில் ஒரு தரப்பினர் மீது தாக்குதல் நடைபெற்றது. காவல்துறை துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது.

சிங்கத்தாக்குறிச்சி சம்பவத்திற்கு பதிலடியாக முறப்பநாடு அருகே பக்கபட்டி கிராமத்தில் வாழை மரங்கள் முற்றிலும் வெட்டிச்சாய்க்கப்பட்டன. நாணல்காடு கிராமத்தில் குறைந்த அளவே வாழ்ந்து வந்த ஒரு தரப்பினரின் வீடுகள் சூறையாடப்பட்டு, அடித்து விரட்டப்பட்டனர்.

பக்கபட்டி, நாணல்காடு சம்பவத்திற்கு பதிலடியாக நாரைக்கிணறு பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வெட்டிக்கொல்லப்பட்டார். வெள்ளத்துரை கொலைக்குப் பதில் என்று தாழையூத்து ரயில் நிலையம் அருகே எதிர் தரப்பின் இருவர் கொல்லப்பட்டனர்.

கொடியன்குளம் ஊர் குடும்பர் கணபதி தலைமையில் கூட்டம் போட்டனர் என்றும், வெள்ளத்துரை கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர், ஆயுதங்கள் வைத்துள்ளனர் என்றும் கூறி 1995 ஆகஸ்ட் 31 அன்று கொடியன்குளம், ஆலந்தா, காசிலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் காவல்துறையின் 24 வாகனங்களில் சென்ற பெரும் படை தேடுதல் வேட்டை நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர். வீடுகள், பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது.

இந்த தேடுதல் வேட்டையின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஏ.பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில் குமார் சிங் ஆகியோர் தலைமையில் வந்த காவல்துறை தாக்குதல் நடத்தியதாகவும், அதிமுக ஆட்சி நடைபெற்றதால், முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலா அவரது உறவினரான மாவட்ட ஆட்சியர் ஏ.பன்னீர்செல்வம் செய்த சதி என்று கொடியன்குளம் பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். தாக்குதல் சம்பவத்தால் மூன்று நாட்கள் காட்டிற்குள் தங்கியிருந்தனர்.

ஊர் குடும்பர் கணபதி, வெங்கடேஷ், கோட்டை மாடசாமி ஆகியோர் மீது முதல் தாக்குதல் நடைபெற்றதாகவும், பால்துரை, கனி ஆகியோர் துப்பாக்கிச்சூட்டினால் பாதிக்கப்பட்டதாகவும், பல லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாகவும் பொதுமக்கள் தரப்பில் மணியாச்சி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

கொடியன்குளம் கிராமத்தில் காவல்துறை நடத்திய சோதனையில் 25 அரிவாள்கள், 25 கம்புகள், 10 இரும்புத் தடிகள், சில பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் 53 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஏ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார்.

டாக்டர்.கிருஷ்ணசாமி கொடியன்குளம் கிராமத்திற்குச் சென்று பார்வையிட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். முதலாவது குடிநீர் வழங்குங்கள் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக அமைச்சர்கள் கண்ணப்பன், முத்துசாமி, நாகூர் மீரான் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்றனர். மக்கள் அவர்களை சந்திக்க மறுத்தி திருப்பி அனுப்பி விட்டனர்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சங்கரன்கோவில் கோபாலகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் எஸ்.எக்ஸ்.ராஜமன்னார் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து விலகினர்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

தமிழக காவல்துறை தலைவர் வைகுந்த் செப்டம்பர் ஐந்தாம் நாள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தமிழக அரசுக்க அறிக்கை அனுப்பினார். அதன் பிறகு கோமதிநாயகம் ஆணையம் என்று தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையத்தை கொடியன்குளம் தரப்பு மக்கள் முற்றிலும் புறக்கணித்து விட்டனர். தமிழக அரசின் இழப்பீட்டையும் ஏற்க மறுத்தனர்.

1996இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு தரப்பினரின் ஆதரவோடு தனித்துப் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றார். மற்றொரு தரப்பினரின் ஆதரவு பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பசாமி சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.

கொடியன்குளம் தாக்குதல்

1995 ஆகஸ்ட் 31

தோழர் நல்லக்கண்ணு மாமனார். மருதன்வாழ்வு ஆசிரியர் அ.க.அன்னசாமி படுகொலை

1995 டிசம்பர் 3

மருதன்வாழ்வு ஆசிரியர் அ.க.அன்னசாமி – மிக்கேலம்மாள் தம்பதியரின் ஐந்து பெண் குழந்தைகளில் ஒருவர் ரஞ்சிதம். தோழர் நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம்

ஆசிரியர் அ.க.அன்னசாமி ஜவகர் வாலிபர் சங்கம், இரவு நேர பாடசாலை உட்பட பல்வேறு சமூக நலப் பணிகளை மருதன்வாழ்வு கிராமத்தில் செய்து வந்தவர்.

ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற 86 வயது தோழர் அ.க.அன்னசாமி தனது இரண்டாவது மனைவி சந்தோசியம்மாள் முன்பே, 1995 டிசம்பர் 3 அன்று  மருதன்வாழ்வில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெட்டிக் கொல்லப்பட்டார். 

தகவல் :

ஓர் அன்னப்பறவை_ மருதன்வாழ்வு அ.க.அன்னச்சாமி வாழ்க்கை

_ எழுத்தாளர் பொன்னீலன், மக்கள் வெளியீடு

1995 தொடங்கிய தென் மாவட்ட மோதல் சம்பவங்கள் 1998 வரை நீடித்தது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)