மசூதி நிலம் யாருக்கு சொந்தம் ? - மீண்டும் நில சர்ச்சை; அகழ்வாய்வுக்கு உத்தரவு

 


உத்தரப் பிரதேசதின் வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் ஆலயம் அமைந்துள்ளது. இதன் அருகே ஞான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை அகற்றி, முகலாய மன்னர் ஒளரங்கசீப், இந்த மசூதியைக் கட்டியதாகவும், மசூதி அமைந்துள்ள இடம் காசி விஸ்வநாதர் ஆலயதிற்குச் சொந்தமானது எனவும் வழக்கு தொடரபட்டது

இந்த வழக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் சிவில் விரைவு நீதிமன்றத்தில், நேற்று (08.04.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், ஞான்வாபி மசூதி அமைந்துள்ள இடத்தில், தொல்லியல் துறை மூலம் ஆய்வு நடத்த உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. முதலில், தரையை ரேடார் அல்லது ஜியோ ரேடியாலஜி முறையில் ஆய்வு செய்து, தேவைப்பட்டால் அகழ்வாராய்ச்சி நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐந்து பேர்கொண்ட நிபுணர் குழு மூலம் இந்த தொல்லியல் ஆய்வை நடத்த உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், குழுவில் இரண்டு சிறுபான்மையினராவது இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயா் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என உத்தரப்பிரதேச சன்னி மத்திய வஃக்பு வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது