நோன்பின் கடமைகள் (பர்ளுகள்)


 1) பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும், பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்குமாறு ஏவலாம்.

2) பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்பிற்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.

3) முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

4) சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால், அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

5) பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பிய பின், விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

6) கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண், நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என பயந்தால், நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப் பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

7) மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு, விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

8) நீரில் மூழ்குதல் மற்றும் தீ விபத்துப் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பின்பு அந்த நோன்பை நோற்க வேண்டும்.

நோன்பை முறிக்கும் செயல்கள்

1) சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்றவற்றால் நோன்பு முறிந்துவிடும்.

2) முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும். தூக்கத்தில் தானாகவே இத்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.

3) உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்பிற்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.

4) மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும்

நோன்பின் அனுமதிகள்

1) நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்றவற்றிற்கு அனுமதியுள்ளது.

2) நோன்பு நாட்களின் பகற்பொழுதில் பல்துலக்குவதில் தவறில்லை. அது நோன்பல்லாத நாட்களில் சுன்னத்தாக இருப்பது போன்றே, நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும்.

3) குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் உணவு உண்பதில் தவறில்லை. சுப்ஹு தொழுகைக்காக, குளித்துக் கொண்டாலே போதுமானது.

4) கடும் வெயிலின் காரணமாக, குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதிலோ, அல்லது பகல் மற்றும் மாலைப் பொழுதில் குளித்துக் கொள்வதிலோ தவறில்லை.

5) வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கி விட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை நோன்பு நேரத்தில் தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.

6) நேரம் தெரியாது, சூரியன் மறைந்துவிட்டதாக எண்ணி, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று எண்ணி, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ, சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரத்தை தெரிந்து விட்டால், உடனே உணவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

7) காயங்கள், சிறு மூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது.

8) மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டால், அல்லது குடித்தால் நோன்பு முறியாது, ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனேயே நிறுத்திக் கொள்ளவேண்டும்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்