ரமலான் மாதம் தொடங்க இருப்பதால், ஊரடங்கில் சில தளர்வுகள் தேவை” - எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோரிக்கை

 


சமீபகாலமாக அதிகரித்துவரும் கரோனா 2வது அலை பரவல் தொடர்பாக, தமிழக அரசு பகுதிநேர ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் சில தளர்வுகள் வேண்டி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச. உமர் பாரூக் தமிழக தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு கோரிக்கை மனு அளித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், ராஜா முகமது ஆகியோர் உடன் இருந்தனர்

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, “கோவிட் 2வது அலை பரவல் தொடர்பாக ஏப்ரல் 10 முதல் அமல்படுத்தப்பட உள்ள சில வழிமுறைகளுடன் கூடிய பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மத வழிபாடு தொடர்பான நிகழ்வுகளுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்.14 முதல் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்குகிறது.

இம்மாதத்தில் அதிகமான அளவு இரவு நேர வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். கடந்த ஆண்டு கோவிட் பரவல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இஸ்லாமியர்கள் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

ஆகவே, இதனைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்சம் இரவு 8 மணி முதலான ஊரடங்கு அறிவிப்பை இரவு 10 மணிக்கு மாற்றினால், அது இஸ்லாமியர்களின் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், இரவுநேர ஊரடங்கை இரவு 8 மணியிலிருந்து இரவு 10 மணிக்கு மாற்றி அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்