திருச்சியில் பார்வை மாற்றுத் திறனாளிகள் தர்ணா“எங்களுக்கு ஏன் ஓட்டு போடலனு கேட்குறாங்க”
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என தெரிந்ததால், பிற கட்சியினர் வந்து ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என கேட்டதாக பார்வை மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வயர்லெஸ் ரோடு பகுதியில்; நூற்றுக்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக நலத்துறையில் தங்களுடைய பார்வையற்றோர் நிறுவனத்தை பதிவு செய்வதற்கு போதிய ஆவணங்கள் தராமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்வதாகவும், கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பது கட்சியினருக்கு தெரிந்துவிட்டதால் ஏன் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என தங்களிடம் கேட்டனர், எனவே அச்சத்தில் இம்முறை வாக்களிக்காமல் உள்ளதாகவும் கூறி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் மற்றும் கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தாசில்தார் குகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெள்ளிக் கிழமைக்குள் தேவைப்படும் சான்றிதழ்கள் கிடைக்க வழிவகை செய்வதாகவும், தற்போது வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதைடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.