பல கோடி ரூபாயை வாரி சுருட்டிய உத்திரமேரூர் அதிமுக பிரமுகர் - தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சியில் பாவோடும் தோப்புத் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் (39) கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் அதிமுகவில் ஓட்டுநரணியில் பொறுப்பாளராகவும் உள்ளார்.
இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். ஏலச் சீட்டானது ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை சீட்டு போடப்பட்டது. இந்த ஏலச் சீட்டில் 100க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பாக்கியராஜ் ஏலச்சீட்டு பணத்தினை முழுமையாக எடுத்துக் கொண்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் அதிமுக பிரமுகர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். பின்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவுகளில் புகார் அளித்திருந்தனர். மேலும் 200 க்கும், மேற்பட்ட பெண்களிடம், தீபாவளி பண்டு சீட்டு, நகை கடன், வட்டிக்கு கடன் , தினத்தவணைகடன், மாதத் தவணை கடன், மாத தவணை கடன் என பல கோடிக்கு மேல் ஏமாற்றியது புற்றீசல் போல் வெளிவரத் துவங்கியது.
இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 100ற்கும் மேற்பட்டோர் தலைமறைவான பாக்கியராஜின் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, உத்திரமேரூர் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு நினைவூட்டல் புகார் மனு அளித்தனர்.