ஸ்டாலின் மீண்டும் சைக்கிள் பயணம்..
மு.க.ஸ்டாலின் நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பின் கிழக்கு கடற்கரைச் சாலையில் நேற்று மீண்டும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். நடைபயிற்சி, உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ள மு.க.ஸ்டாலின் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரை முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. தீவிர தேர்தல் பணி மற்றும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் இவற்றால் கடந்த 2 மாதங்களாக ஸ்டாலினால் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.
தேர்தல் முடிந்துள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிழக்கு கடற்கரைச் சாலையில் நேற்று காலை ஸ்டாலின் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.
நீலாங்கரை முதல் மாமல்லபுரம் வரை அவர் சைக்கிள் ஓட்டிச் சென்றார். அப்போது பொதுமக்கள் பலர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
30 கி.மீ. தூரம் மாமல்லபுரம் வரை சைக்கிளில் சென்ற ஸ்டாலின், பின்னர் காரில் வீடு திரும்பினார்.