அரசின் முரண்பட்ட தகவல்... - குஜராத் உண்மை நிலவரம் என்ன?
கொரோனா 2-ம் அலை தமிழகத்தைத் தாண்டி பல்வேறு மாநிலங்களிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து வரும் தகவல்கள் கூடுதல் பயத்தை கொடுக்கின்றன. இது தொடர்பாக அங்குள்ள செய்தி ஊடகங்கள் சொல்வதை சற்றே விரிவாகப் பார்ப்போம்
குஜராத்தின் உள்ளூர் ஊடகங்கள் பலவும், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க, மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லை, அவர்களை மருத்துவமனை அழைத்து வர, கொண்டு செல்ல, அவசர ஊர்திகளும் இல்லை. இதைவிட கொடுமை, கொரோனாவால் உயிரிழந்தவர்களால் மயானங்களில் வழக்கத்தைக் காட்டிலும் மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான உடல்கள் எரியூட்டப்படுகின்றன என்று கூறி, அது தொடர்பாக வெளியிடும் புகைப்படங்களும் சற்றே அதிர்ச்சியை தருகின்றன. மயானத்தில் இடங்கள் பற்றாக்குறையால் பொதுவெளி மைதானங்களில் சடலங்கள் எரிக்கப்படுகின்றன.
ஊடகங்கள் சொல்லும் தகவல்கள் இப்படி இருக்க, குஜராத் அரசு வெளியிடும் தகவல்களோ வேறு ரகமாக இருக்கின்றன. இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்பாக அரசு வெளியிடும் எண்ணிக்கையும், மயானங்களில் தகனம் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய முரண்பாடு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
உதாரணமாக, அகமதாபாத்தில், ஏப்ரல் 12 அன்று 20 மரணங்கள் நிகழ்ந்ததாக மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் குஜராத்தியின் முன்னணி செய்தித்தாளான சந்தேஷ், அரசாங்கம் குறிப்பிட்ட அதே நாளில், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே 60 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.
மற்றொரு குறிப்பிடத்தக்க உதாரணம், ஜாம்நகரில் இருந்து, அரசாங்கத்தால் நடத்தப்படும் குரு கோபிந்த் சிங் மருத்துவமனையில் ஏப்ரல் 10 முதல் 11 வரை ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்று அரசு கூறியிருக்கும் அதேவேளையில், உள்ளூர் டிஜிட்டல் செய்தி வெளியீடான கபர் குஜராத் என்ற செய்தி நிறுவனம், ஏப்ரல் 10 முதல் 11 வரை 48 மணி நேரத்திற்குள் ஜாம்நகரில் 100 பேர் வைரஸால் இறந்ததாகக் கூறி இருக்கிறது. இதேபோல், செய்தி சேனல் 'டிவி 9' குஜராத்தி ஏப்ரல் 12 அன்று குரு கோபிந்த் சிங் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நகரங்களில் உள்ள மயானங்களில் வழக்கத்தைக் காட்டிலும் மூன்று அல்லது நான்கு மடங்கு உடல்கள் தகனம் செய்யப்பட்டுவதை அடிப்படையாக கொண்டு இந்தக் குறிப்புகளை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. மேலும், சில இடங்களில் இறந்தவர்களில் உடல்களை தகனம் செய்ய 8 முதல் 10 மணி நேரம் வரை மக்கள் காத்துக் கிடக்கிறார்கள் என்று வேதனைகளை பதிவு செய்து வருகின்றன செய்தி ஊடகங்கள்.
ஆனால் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ``இறப்பு எண்ணிக்கையை மறைக்கவில்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களை குஜராத் பின்பற்றுகிறது. கொரோனா முதன்மைக் காரணியாக இருக்கும்போது மட்டுமே மரணத்திற்கு காரணம் என்று பட்டியலிடப்பட வேண்டும்" என்று விளக்கம் கொடுத்தார்.
அவரது விளக்கம் அளித்த அடுத்த சில நாள்களிலேயே, அகமதாபாத் மருத்துவக் கூட்டமைப்பு, முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், ``நிலைமை மிகவும் மோசமடைந்துவருகிறது. கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் குஜராத்தின் உண்மை நிலவரத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்பது ஊடகங்கள், மருத்துவர்கள் கூற்றாக இருக்கிறது.
இதற்கிடையே, மகாராஷ்டிராவிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான் தொடர்கிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் 60,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகும் நிலையில், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 80 சதவீதம் நிரம்பிவிட்டன. ஐ.சி.யு. மற்றும் வென்டிலேட்டர் வசதியுள்ள படுக்கைகளில் 98 சதவீதம் நிரம்பிவிட்டன.
இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட, அதிகமான அறிகுறி இல்லாத நோயாளிகளைத் தங்கவைத்து சிகிச்சை அளிக்க இரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை முன்பதிவு செய்த மும்பை மாநகராட்சி நட்சத்திர விடுதிகள் இனி கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா காரமான ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனால் குஜராத்தை போல அங்கும் உடல்களை தகனம் செய்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது.