கொரோனா பரவல்; அரசின் கட்டுப்பாடுகளுக்கு அனைத்து மதத் தலைவர்களும் முழு ஒத்துழைப்பு..

 


கொரோனா தொற்று பரவல் தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மதத்தலைவர்களுடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத் துறை டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார், பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் டி.ஜெகன்நாதன், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இந்து மதத்தலைவர்கள், இஸ்லாமிய மதத்தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ மதம், ஜெயின், சீக்கிய மதத் தலைவர்கள் ஆகியோரை தனித்தனியாக அதிகாரிகள் அழைத்து ஆலோசனை செய்தனர்.

இந்த கூட்டத்தில் இந்து மதம் சார்பில் ராமகிருஷ்ணா மிஷன், பிரம்மகுமாரிகள், இஸ்கான், ஐ.எஸ்.எச்.ஏ. அமைப்புகள் உள்ளிட்ட 11 அமைப்புகளும், கிறிஸ்தவ மதம் சார்பில் தென்னிந்திய திருச்சபை, ரோமன் கத்தோலிக்க திருச்சபை, இ.சி.ஐ., எபிஸ்கோபல் திருச்சபை, பெந்தேகோஸ்த் சினாட் உள்ளிட்ட அமைப்புகளும், இஸ்லாமிய மதம் சார்பில் தமிழ்நாடு சன்னத் முஸ்லிம் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், தமிழ்நாடு ஷியா முஸ்லிம் தலைமை காஜி குலாம் முகமது மஹதிகான் மற்றும் சில அமைப்புகள் பங்கேற்றன.

பின்னர் நிருபர்களுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் அளித்த பேட்டியில், ’’ரம்ஜான் மாதத்தின் 27-ம் நாள் வரும் லைலத்துல் கதிர் மே 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. அது மிகவும் சிறப்பு வாய்ந்த தினம் என்பதால் அன்று மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்த அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். மற்றபடி, அரசு மேற்கொள்ளும் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என்று தெரிவித்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டார்.

எபிஸ்கோபல் திருச்சபை பேராயர் மேசாக்ராஜா கூறுகையில், “அரசு கொண்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தருவோம். ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் காலையில் 1 மணி நேரம், மாலையில் 1 மணிநேரம் 50 சதவீத உறுப்பினர்களுடன் ஆலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்” என்றார். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை 10.50 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)