தடுப்பூசி திட்டம் நாளை தொடங்காது: மாநகர ஆணையர் பிரகாஷ் தகவல்

 


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு மாநகர ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா 2ம் அலை காரணமாக , கடந்த ஆண்டை காட்டிலும் சென்னையில் 3 மடங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் 20 சதவீத அளவிற்கு பரிசோதனையின்போது பாசிட்டிவ் ஏற்படுகிறது .

சென்னையில் தற்போது 33,500 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை முறையை மூன்றாக பிரித்துள்ளோம், அதன்படி வீட்டிலேயே தனிமையில் உள்ளோர் 65-70 சதவீதம் பேர். 15-20 சதவீதம் நபர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ளனர். 10-13 சதவீதம் உயர் சிகிச்சை தேவைப்படும் மூச்சு திணறல் , ஆக்சிஜன் பாதிப்புடையோர். சென்னையில் 3,500-4000 பேர் தற்போது இந்த பாதிப்பு நிலையில் இருக்கின்றனர்.

இது அதிகரிக்கும் என்பதே வல்லுநர்கள் கருத்தாக உள்ளது. இவர்களில் பலருக்கு ஆக்சிஜன், ஐசியூ, வெண்டிலேட்டர் தேவைப்படும். மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகள் சிகிச்சை மையங்கள் உட்பட 2ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகளை சென்னையில் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளோம். 1000 ஆக்சிஜன் படுக்கைகள் நந்தம்பாக்கத்தில் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. 3,000 - 3,500 ஆக்சிஜன் படுக்கைகள் 10 முதல் 13 நாளில் சென்னையில் பயன்பாட்டுக்கு வரும்.

கொரோனா தடுப்பு பணிக்காக 120 மருத்துவர்கள், 100 செவிலியர்கள், ஆய்வக பரிசோதனை பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அம்மா மினி கிளினிக்கின் 200 மருத்துவர்கள் மற்றும் நேற்று தேர்வு செய்யப்பட்ட 120 மருத்துவர்கள் என மொத்தமாக 320 மருத்துவர்களும் நேரடியாக களத்தில் சென்று வீட்டு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்வர். இதன்மூலம் மருத்துவ குழுவே வீடு தேடி செல்கிறது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் நாளையே உடனடியாக அமலுக்கு வர வாய்ப்பு இல்லை, போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. எனவே திட்டம் நாளை தொடங்காது. அதே நேரம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும். சிலருக்கு 2ம் தவணை தடுப்பூசிகள் தாமதமானது உண்மைதான். வல்லுநர்கள் 2, 3 நாள் தாமதமாக இரண்டாம் தவணை செலுத்தி கொண்டாலும் தவறில்லை. தடுப்பூசி இருப்பை பொறுத்தே 2ம் தவணை செலுத்த முடியும்.

சென்னையில் 1.46 ஆக கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது. சாதாரண காய்ச்சல் என அலட்சியாமாக இருக்காமல் உடனடியாக சோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பால் சிகிச்சை எடுப்பதில் வெட்கம் கிடையாது என மக்கள் உணர வேண்டும். 30 வயதை ஒட்டிய இளைஞர்கள் சிலர் பரிசோதனையின்றி முரட்டு தைரியத்துடன் இருப்பதால்தான் மரணம் அடைகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்