பா.ஜ.க நிர்வாகியின் வீட்டை சூறையாடிய அ.தி.மு.கவினர் - தஞ்சையில் பதற்றம்!

 


தமிழகத்தில் உள்ள ஆறு, குளங்கள் மற்றும் ஏரிகளில் மண் அள்ளுவதற்கு தடைவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றங்கள் கடுமையான பல உத்தரவுகளை பிறப்பித்தும் அதை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.

மேலும், அரசு மற்றும் அதிகாரிகள் உரிய முறையில் சட்டங்களை அமல்படுத்தாத சூழலால், கடத்தல்காரர்களுக்கு முன் ஜாமின் கிடைக்கும் வரை காவல்துறையினரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் அவர்களை கண்டு கொள்வதில்லை என நீதிமன்றமே விமர்சித்திருந்தது.

அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலை பேணிக்காக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இனி மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் முன் ஜாமின் கோருபவர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்காது என்று கடந்த செப்டபர் மாதம் நடந்த விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் கூட, உத்தரவை மீறி பல இடங்களில் மணல் திருட்டு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இந்நிலையில், தடையை மீறி பவானி ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மண் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் மோதிக்கொண்டதில், பா.ஜ.க நிர்வாகியின் வீட்டை சூறையாடிய சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைக்கனி. இவர் பா.ஜ.க தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இதேபகுதியைச் சேர்ந்தவர் மோகன் தாஸ். இவர் அ.தி.மு.க மாவட்ட முக்கிய நிர்வாகியாவர். இரு தரப்பினரும் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை அமலில் இருந்ததால், மணல் திருட்டை கடந்த ஒருமாதமாக நிறுத்தி வைத்திருந்தனர். இதனிடையே வாக்குபதிவுகள் முடிந்த மறுநாளே மீண்டும் மணல் எடுக்கும் தங்களின் வேலையை இரண்டு பிரிவிருனரும் செய்து வந்தனர்.

இதில், மோகன் தாஸூக்கு திருவையாறு பகுதி தில்லைஸ்தானம் ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மோகன் தாஸ் மணல் எடுத்துக்கொண்டு வரும்போது, கள்ளப்பெரம்பூர் வழியில் ஆசைக்கனியின் ஆதரவாளர்கள் மோகன் தாஸ் மணல் லாரியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஆசைக்கனி, தான் சென்ட்ரல்; நீ வெறும் ஸ்டேட்தான். என்னிடம் கேட்காமல் எப்படி மணல் அல்லலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதிகாரிகளுக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். இந்த வாக்குவாதம் 4 மணி நேரமாக நீடிக்க, ஒருகட்டத்தில் இரண்டு பிரிவினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்றுள்ளார். ஆனால் கடைசி வரை காவல்துறையினரோ, அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு வரவில்லை.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மோகன் தான், தனது ஆதரவாளர்களை அனுப்பி ஆசைக்கனியின் வீட்டை சூறையாடியுள்ளார். அப்போது ஆசைக்கனி வீட்டில் இருந்த பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் படத்தை மற்றும் வீட்டில் இருந்த பொட்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது ஆசைக்கனி உள்ளிட்ட ஆதரவாளர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஆசைக்கனி கொடுத்தப்புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த கள்ளப்பெரம்பூர் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக, 12 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மணல் எடுப்பதில் அ.தி.மு.கவினர் மற்றும் பா.ஜ.கவினரிடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், “மணல் திட்டில் ஈடுபடுவர்களை புகார் மட்டுமின்றி, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களையும் பல நேரங்களில், சிறை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. எடுத்தாலும், பெயரளவுக்கு ஒரு வழக்குப்பதிவு செய்துவிட்டு விடுவித்து விடுகிறார்கள்.

இந்த மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களாக இருப்பதால், அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மணல் முக்கிய பங்கு வகிக்கும் ஆற்றையும், அதன் வளத்தை பாதுகாக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றில் ஏராளமான கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருப்பதால், மணல் கொள்ளையை அடியோடு தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.