நாகையில் தலைகீழ் யாகம்.. தீயில் இறங்க முயன்ற சித்தரை தடுத்த போலீஸ்..

 


நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தினசரி பாதிப்பு விகிதமும் இறப்பு விகிதமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசானது சில கட்டுப்பாடுகளுடன் அடங்கிய ஊரடங்கு நேற்றுமுன் முதல் அமல்படுத்தியுள்ளது.

கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே உள்ள ஆலங்குடியில் காமாட்சி அருள் என்பவர் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் தீயில் இறங்கி யாகம் செய்யப்போவதாக சித்தர் ஒருவர் அறிவித்தார்.

இதையறிந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரவு நேரத்தில் ஒன்று திரண்டனர். மேலும் 8 அடி ஆழம் தோண்டிய குழியில் விறகுகளை அடுக்கி வேள்வி யாகம் என்ற பெயரில் அக்னி குண்டத்தில் இறங்கி சிறப்பு வழிபாடு செய்வதாக சித்தர் கூறியதை அடுத்து அதனை காண காத்திருந்தனர்.

மேலும் இந்த யாகத்தின் மூலம் சில மாதங்களில் இந்தக் கோவில் மாபெரும் கோட்டையாக உருவாக்கப்படும் எனக் கூறிக் கொண்டிருந்தார். அப்போது தகவலறிந்து திடீரென அந்த இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர்.

பின்னர் கோயில் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடைவிதித்துள்ளது என போலீஸார் சித்தரிடம் தெரிவித்தனர்.

பின்பு அங்கிருந்த கூட்டத்தை கலைத்து காவல்துறை முன்னிலையில் கட்டுப்பாடுகளுடன் வேள்வி யாகம் நடத்தப்பட்டது. அந்த சித்தர் ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த சொக்கநாதர் ஆவார். அவர் 27 ஆண்டுகளாக உணவை உட்கொள்ளாமல் உமிழ்நீரை மட்டுமே உட்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

கொரோனா விதிமுறைகளை மீறி இரவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டி வேள்வி தீ யாகத்தில் இறங்க முயன்ற சித்தரை போலீசார் வந்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.