கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்..

 


தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுனர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த ஆய்விற்கு பின்பு, நோய்த்தொற்றின் விகிதத்தை குறைப்பதற்காக, கீழ்க்காணும் உத்தரவு மற்றும் அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறையினருக்கு முதல்-அமைச்சர் வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்கு நோய்த்தொற்றின் விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழ் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொற்றின் விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழாகவே உள்ளது என்ற போதிலும், ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனைகளை நாளொன்றுக்கு 90 ஆயிரத்துக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகவும் அதிகப்படுத்த வேண்டும். மேலும் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் தேவையான அளவில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து சளி, மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நாள் வரை 8 லட்சத்து 92 ஆயிரத்து 682 முகாம்கள் அமைக்கப்பட்டு, காய்ச்சல் உள்ள 14 லட்சத்து 47 ஆயிரத்து 69 பேரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 10-ந்தேதி 1,309 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939-ன்படி இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதாரம், உள்ளாட்சி, காவல், வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

10-4-2021 வரை 16 லட்சத்து 37 ஆயிரத்து 245 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம், 1939-ன் கீழ் ரூ.17 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 700 அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் நெறிமுறைகளின்படி 11-4-2021 (நேற்றுமுன்தினம்) வரை சுகாதார ஊழியர்கள், முன்களப்பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் என மொத்தம் 37 லட்சத்து 80 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

மேலும் 11-4-2021 வரை 54 லட்சத்து 85 ஆயிரத்து 720 தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

அந்தந்த தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பணியிடங்கள், சந்தைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில், சம்பந்தப்பட்ட அமைப்புகள், பெருநகர சென்னை மாநகராட்சி/ மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கோவிட் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் அதிக நபர்களுக்கு தடுப்பூசி போட இயலும். குறிப்பாக, களப்பணி ஆற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும், அடுத்த 2 வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

எனவே, அரசு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற, கொரோனா தொற்று நீங்கிட, சுகாதாரம், காவல், வருவாய், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழ்நாடு அரசு உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.

திரையரங்குகள், காய்கனி சந்தைகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய இடங்களில் பணிபுரிபவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)