இ-பாஸ் கட்டாயம்... பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை... தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

 


மாவட்ட பேருந்துகள், சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், ஒருபுறம் தொற்று பரவல் பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரிக்க தொடங்கியது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 4000ஐ நெருங்கி வருகிறது. 

இந்நிலையில், கொரோனாவை தடுக்க தமிழக அரசு சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது, தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. 

அதேபோன்று தமிழகத்திலிருந்து புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் பேருந்துகளில் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். நின்று கொண்டு செல்ல அனுமதியில்லை. 

வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பாஸ் முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.