மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்காக என்னை சந்தித்து உதவி கேட்கலாம்: காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உறுதி

 


கல்வி வளர்ச்சிக்காக பள்ளி மாணவ, மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்தித்து உதவி கேட்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சேஞ்ச் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். முன்னதாக, தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பழனிவேல்சாமி வரவேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமை வகித்து, திருப்பத்தூர் அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி மற்றும் கசிநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வசதியற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், புத்தகப்பை, பேனா, பென்சில் மற்றும் முகக்கவசம் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

அப்போது, அவர் பேசும்போது, ‘‘கல்வி என்பது அறிவை மட்டும் போதிப்பது அல்ல. தனி மனித ஒழுக்கம், கட்டுப்பாடு, கடமை, சமுதாய பொறுப்பு ஆகியவற்றையும் கற்று கொடுப்பது ஆகும். கிராமப்புற மாணவர்கள் அனைவரும் கல்வியை கற்க வேண்டும். வசதியில்லை என்பதால் யாரும் கல்வியை கைவிட்டுவிடக்கூடாது. இதற்காகவே, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அதேபோல, திருப்பத்தூர் சேஞ்ச் தொண்டு நிறுவனம் பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்களை தேர்வு செய்து கல்வி உபகரணங்களை வழங்கி வருகின்றனர். இதை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது, கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வீட்டில் இருந்தபடி படித்தாலும் சரி, பள்ளிக்கு சென்று படிக்க நேரிட்டாலும் சரி கல்வியில் மாணவர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வியை பெற வேண்டும். எதிர்காலத்தில் ஆசிரியர், மருத்துவர், காவல் துறை அதிகாரி, ராணுவ வீரர்கள், ஆட்சியாளர் என பொறுப்புள்ள பதவிக்கு வர வேண்டும் என்ற கனவுடன் படிக்க வேண்டும். கல்வி வளர்ச்சிக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்தித்து நீங்கள் உதவி கேட்கலாம்.

திருப்பத்தூர் மாவட்ட மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக மாவட்ட காவல் துறை அலுவலகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்’’ என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்