நோன்பாளி பல் துலக்குவதில் குற்றமில்லை


1) என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு முறை உளுச் செய்யும் போதும் பல் துலக்குவதற்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 (ஆதாரம்: திர்மிதி, நஸாயி)

2) நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது கணக்கிட முடியாத அளவிற்கு பல் துலக்குவதை நான் பார்த்திருக்கின்றேன் என ஆமிர் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 (ஆதாரம்: புகாரி)

3) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், நோன்பு நோற்றிருக்கும் போது பகலின் ஆரம்பம் இன்னும் கடைசி நேரத்தில் பல் துலக்குவார்கள். 

(ஆதாரம்: புகாரி)

விளக்கம்: பல் துலக்குவது நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திய சுன்னத்தாகும். இதனை நோன்பிலும் நோன்பு அல்லாத காலங்களிலும் செய்துள்ளார்கள். சிலர் நோன்பு நோற்றவர் பல் துலக்குவது கூடாது என்றும், அல்லது லுஹர் நேரத்திற்குப்பின் செய்யக்கூடாது என்றும் கூறுவது ஆதாரமற்றதாகும்.

நோன்பாளியின் உளு

அல்லாஹ்வின் தூதரே! உளுவைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுங்கள் என நபி (ஸல்) அவர்களிடத்தில் நான் கேட்டேன். உளுவைப் பரிபூரணமாகச் செய்து கொள்ளுங்கள் என கூறினார்கள். இன்னும் விரல்களுக்கு மத்தியில் கோதிக் கழுவுங்கள், நோன்பில்லாத நிலையில் மூக்கிற்கு தண்ணீர் செலுத்துவதை அதிகப்படுத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என லகீத் இப்னு சபீரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 

(ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)

விளக்கம்: நோன்பு நோற்றவர் உளுச் செய்தால் நாசிக்கும் வாய்க்கும் தண்ணீர் செலுத்தும்போது அடித்தொண்டை இன்;னும் அடிமூக்கு வரைக்கும் தண்ணீரைச் செலுத்தாமல் நோன்பில்லாத நேரத்தில் செய்வதை விட குறைத்துச் செய்ய வேண்டும். அடிமூக்கு அடித்தொண்டை வரைக்கும் தண்ணீரை செலுத்தினால் வாய்க்குள் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பிருக்கின்றது

நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்

1) அமல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்தே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்: புகாரி)

2) பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்: திர்மிதி)

பெருந்தொடக்குள்ள பெண்கள்

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் வாழும்போது (மாதவிடாய் காரணமாக) சுத்தம் இல்லாமல் இருந்தால் (தொழவும் மாட்டோம், நோன்பு நோற்கவும் மாட்டோம்) சுத்தமானதும் நாங்கள் (விட்ட) நோன்புகளை நோற்கும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ஆனால், விடுபட்ட தொழுகைகளைத் தொழும்படி ஏவமாட்டார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: பெண்கள் மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேறினால் சுத்தம் இல்லாத காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது, சுத்தமானதும் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். அதற்காக எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்