அம்மா உணவகத்தின் பால் சீலிங் முழுவதும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிரதான நுழைவு வாயிலையொட்டி, 'அம்மா' உணவகம் செயல்படுகிறது. மருத்துவமனைக்கு வருவோர், கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணியர், அம்மா உணவகத்திற்கு சாப்பிட செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பாக 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மா உணவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் பணியாளர்கள் அம்மா உணவகத்தின் நுழைவாயிலை திறக்க முயற்சிக்கும் போது அம்மா உணவகத்தின் மேற்கூரையில் சுமார் 55 அடி நீளம் கொண்ட பால் சீலிங் முற்றிலும் இடிந்து கீழே விழுந்தது.
இந்த விபத்தில் உணவக வளாகத்தின் உள்ளே இருந்த 6 சிலிங் ஃபேன், 12 டேபிள் ஃபேன் மற்றும் டைனிங் டேபிள் உட்பட அனைத்து பொருள்களும் சேதமானது. இந்த அம்மா உணவகம், அரசு மருத்துவமனை அருகே இருப்பதால்; பாமர மக்கள் எப்பொழுதும் அதிக அளவில் இருப்பார்கள். இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.