கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை
புதுக்கோட்டை நகரில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை பொன்நகரில் நேற்று (27/04/2021) நடந்த சம்பவம் மக்களைப் பதைபதைக்க வைத்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சாலை அசோக் நகர் அருகில் உள்ளது பொன்நகர். இப்பகுதியைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியரான பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் லோகபிரியா (வயது 20), கல்லூரி மாணவி. மின்வாரிய ஊழியரான பழனியப்பன், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், அவரது மனைவி சிவகாமிக்கு அதே மின்வாரியத்தில் அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டது.
வழக்கம்போல சிவகாமி வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவார். செவ்வாய்க்கிழமையும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், லோகபிரியா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். வேலை முடிந்து அன்று மாலை சிவகாமி வீடு திரும்பியபோது அவர் பார்த்தது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த லோகபிரியா கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, சடலமாக கிடந்துள்ளார். மகளின் உடலைப் பார்த்து சிவகாமி கதறி அழுததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கணேஷ்நகர் காவல்துறையினர், கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், மோப்ப நாய் அர்ச்சுன் வந்து வீட்டைச் சுற்றிவிட்டு திரும்பியது. கை ரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். அப்போது சிவகாமி, வீட்டில் இருந்த சுமார் 50 பவுன் நகைகளையும் ஸ்கூட்டரையும் காணவில்லை என்று கூறினார். தொடர்ந்து சிவகாமி மற்றும் லோகபிரியாவின் காதலரான உறவினரையும் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், லோகபிரியா மதியம் தனது உறவினரிடம் ஃபோனில் பேசியதும், அப்போது எனது அண்ணன் (பெரியப்பா மகன்) வீட்டுக்குள் வருகிறார், பிறகு பேசுவதாக ஃபோனை வைத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. லோகபிரியா தனது வீட்டுக்கு வந்ததாகச் சொன்ன அவரது அண்ணனைக் காணவில்லை. அதனால் நகைக்காக இந்தக் கொலை நடந்ததா? அல்லது லோகபிரியாவின் காதல் விவகாரம் பிடிக்காமல் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் காதல் விவகாரத்தால் கொலை செய்தவர், அதனை மறைக்க நகைகளை அள்ளிச் சென்று திசைத் திருப்பும் முயற்சி செய்திருக்கலாமா? என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
புதுக்கோட்டையில் அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.