திருப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்

 திருப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூரை அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் வேகமாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீதும், சாலையில் நின்றிருந்தவர்கள் மீதும் மோதியதாக தெரிகிறது. இதில் சாலையோரம் நின்றிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கார் மோதியதில் ஐந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், விளம்பர பலகைகள் ஆகியவை சேதமடைந்ததாக தெரிகிறது. விபத்திற்கு காரணமான காரில் இருந்தவர்களை பிடித்து, காருடன் பூண்டி காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காரை ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்தார்களா? அவர்கள் யார் என பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். பூண்டி சிக்னலில் போலீசார் இல்லாத காரணத்தால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.