விரைவாக நோன்பு திறப்பது சுன்னத்தாகும்

 


1) நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரை என் உம்மத்தினர் நலவிலேயே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்: புகாரி)

2) நானும், மஸ்ரூக் என்பவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் சென்று மூஃமின்களின் தாயே! நபி (ஸல்) அவர்களின் இரு தோழர்கள் நன்மை தேடும் விஷயத்தில் குறைவு செய்வதில்லை, ஒருவர் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தி முதல் நேரத்தில் தொழுதும் விடுகின்றார். மற்றவர் நோன்பு திறப்பதைப் பிற்படுத்தி தொழுகையையும் பிற்படுத்துகின்றார் என்றனர். யார் நோன்பு திறப்பதையும் தொழுகையையும் அவசரப்படுத்துகின்றார்? என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) என்று நாங்கள் கூறினோம். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்: முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: மற்ற நபித்தோழர் அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் என்று வந்திருக்கின்றது.

 (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: மஃரிப் நேரம் வந்ததும் நோன்பு திறப்பதே சுன்னத்தாகும். இன்று சிலர் மஃரிப் நேரம் வந்த பின்பும், நோன்பு திறக்காமல், பேணுதல் என்ற போர்வையில், சூரியன் மறைந்த பின்பும் நோன்பு திறப்பதைப் பிற்படுத்துகின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ மஃரிப் நேரம் வந்ததும் நோன்பை திறக்கச் சொல்லியிருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாறாகச் செய்வது பேணுதலாகுமா? இது இஸ்லாத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத்தாகும் என இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

 (பத்ஹுல் பாரி 2:235)

பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது

1) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன், கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அதுவும் இல்லையென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். 

(ஆதாரம்: திர்மிதி)

2) உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறக்கட்டும், அது கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)

விளக்கம்: கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பது சிறந்ததாகும். அது இல்லையென்றால் சாதாரண பேரீத்தம் பழம் அதுவும் கிடைக்கவில்லையென்றால் சில மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

 நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்

1) நோன்பாளி, நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்: இப்னுமாஜா)

2) நோன்பாளி நோன்பைத் திறக்கும் வரை, நீதியான அரசன், அநியாயம் செய்யப்பட்டவன், இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: நோன்பாளி, நோன்பு நேரத்தில் கேட்கும் பிரார்த்தனைகளையும், இன்னும் நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். ஆகவே, நோன்பு காலங்களில் அதிக பிரார்த்தனைகளைச் செய்யுங்கள்.

இன்று முஸ்லிம்களில் பலர், நோன்பு திறக்கும் நேரத்தில் வீண் பேச்சுக்களிலும், வீண் வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள். இந்த சிறப்பான நேரங்களை வீணாகக் கழிக்காமல் அல்லாஹ்விடம் நமது ஈருலக வெற்றிக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தியுங்கள். நமது சகல தேவைகளையும் பூர்த்தியாக்கித் தருவதற்கு அல்லாஹ் போதுமானவன்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)