உயர் நீதிமன்றம் கவலை-கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் போதிய கவனம் செலுத்தவில்லை

 


தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் தினந்தோறும் பெருந்தொற்றால் பாதிக்கப்படுவேரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வழக்கு ஒன்றின் விசாரணைக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் காணொளி மூலமாக ஆஜராகி இருந்தார்.

அப்போது தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாரயணனிடம், தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை மிகத் தீவிர பிரச்சனையாக கருத வேண்டும். ஆனால், எந்த விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இல்லை. பொதுமக்களும் முகக் கவசம் அணிவதில்லை. தனி மனித இடைவெளி பின்பற்றுவதில்லை என வேதனை தெரிவித்தார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் தாக்கத்தை குறைக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரை மற்றும் நோய் தடுப்பிற்கு தேவையான மாற்றத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.