“உ.பியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்த பா.ஜ அரசு” - அம்பலப்படுத்திய இந்தியன் எக்ஸ்பிரஸ்!


 உத்தர பிரதேசத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது குறித்தும் அலகாபாத் ஐகோர்ட் இந்த சட்டம் தொடர்பாக என்ன சொல்கிறது என்பது குறித்தும் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் சட்ட பதிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் பகுப்பாய்வு செய்து தகவல்களை திரட்டி உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

“ஜனவரி 2018 மற்றும் டிசம்பர் 2020க்கு இடையில், அலகாபாத் ஐகோர்ட் 120 ஆட்கொணர்வு மனுக்கள் மீது தீர்ப்பளித்துள்ளது. இதில் 32 மாவட்டங்களில் உள்ள மாஜிஸ்திரேட்டு உத்தரவுகளை ரத்து செய்து 94 தடுப்புக் காவல்களில் இருந்த கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மாடு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு அடிப்படையில் மாவட்ட மாஜிஸ்திரேட்டால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 30 வழக்குகளில் - 70 சதவீதத்துக்கும் அதிகமான வழக்கில் உத்தர பிரதேச அரசை ஐகோர்ட் கண்டித்துள்ளது.

மேலும் அவர்கள் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து மனுதாரரை விடுவிக்க உத்தரவிட்டது. மீதமுள்ள 11 மாடு படுகொலை வழக்குகளில் கூட, ஒன்றைத் தவிர, மற்றவைகளில் கீழ் நீதிமன்றமும் ஐகோர்ட்டும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது, அவர்களுக்கு நீதிமன்ற காவல் தேவையில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த மாவட்ட மாஸ்திரேட்டு உத்தரவுகளை உன்னிப்பாக ஆராய்ந்தால், கடுமையான சட்டம் ஏன் உடனடியாக செயல்படுத்தப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. ஏனெனில், ஒரு நபரை முறையான குற்றச்சாட்டு இல்லாமல் மற்றும் விசாரணையின்றி தடுத்து வைக்க தேசிய பாதுகாப்பு சட்டம் இந்த அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

உண்மையில், குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் பெற்றிருந்தாலும் கூட, அந்த நபர் நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்கப்படுவதைத் தடுக்க உத்தர பிரதேசத்தில் இந்த கடுமையான சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஜனவரி 2018 முதல் 2020 டிசம்பர் வரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 12 தடுப்புக் காவல்களில், குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நபர் 200 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்தார்.

மூன்று நபர்கள் தடுப்புக் காவல்களில், 300 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தனர் - ஒரு வழக்கில், 325 நாட்கள், மற்றொரு வழக்கில், 308 நாட்கள் தடுப்புகாவலில் இருந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் இருக்கும் போது, 24 மணிநேரத்திற்குள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்படுவதற்கான ஒரு நபரின் அரசியலமைப்பு உரிமையையும் இந்த சட்டம் பறிக்கிறது.

காவலில் வைக்கப்பட்டுள்ள நபருக்கு ஒரு குற்றவியல் நீதிமன்றத்தின் முன்ஜாமீன் மனுவை நகர்த்துவதற்கான உரிமையும் இல்லை. ஆட்கொணர்வு மனு ஒன்றே அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரே பாதுகாப்பாகும், இது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்களைக் காவலில் எடுக்கும் தடையற்ற அரசு அதிகாரத்திற்கு எதிராக உள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்