இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது-பொறுமையின் வெகுமதி சொர்க்கம்


 மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது.


நோன்பு குறித்து திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது, “ஈமான் கொண்டோரே, உங்களுக்கு முன்பு இருந்த சமூகத்தாருக்கு கடமை ஆக்கப்பட்டதுபோல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்ளச்சம், பயபக்தி உடையவர்களாக வேண்டும் என்பதற்காக” என்று இறைவன் திருக்குர்ஆனில் (2:183) குறிப்பிடுகின்றான்.
ரமலான் நோன்பின் சிறப்பு குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹசரத் ஸல்மானுல் பார்சி (ரலி) இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ரமலானுக்கு முந்தைய ஷபான் மாதத்தில் கடைசி நாட்களில் ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: ‘இறை நம்பிக்கையாளர்களே, அபிவிருத்தி கொண்ட மகத்தான மாதம் உங்களுக்கு வர உள்ளது. அம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அந்த இரவில் வணங்கினால் ஆயிரம் மாதம் வணங்கிய நன்மை உங்களுக்கு உண்டு. அம்மாதத்தில் பகல் காலங்களில் உண்ணாமல், பருகாமல் இருப்பதை உங்கள் மீது இறைவன் கடமையாக்கி உள்ளான். இரவில் நின்று வணங்குவதை உபரியானதாக ஆக்கி உள்ளான். இந்த மாதத்தில் ஒருவர் கடமையான ஒரு செயலைச் செய்தால் மற்ற மாதங்களில் 70 கடமையான செயல்களை செய்தால் என்ன நன்மை உண்டோ அந்த நன்மையைப் பெற்றுக்கொள்வார்”.

இது பொறுமையின் மாதம், பொறுமையின் வெகுமதி சொர்க்கம் ஆகும். சொந்த பந்தங்களுடன் இணங்கி வாழவேண்டும் என மனிதர்களை அறிவுறுத்தும் மாதமாகும். இந்தமாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கான உணவு கொடுத்தால், அந்த உணவைக்கொடுத்தவருக்கு பாவ மன்னிப்பும், நரகத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். மேலும் நோன்பாளிக்கு இறைவனிடம் என்ன நன்மை உண்டோ அந்த அளவு நன்மையும் பெற்றுக்கொள்வார்.

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் மனிதனுக்கு சொர்க்கம் அலங்கரித்து வைக்கப்படும். சொர்க்கத்தைப் பார்த்து இறைவன் இவ்வாறு கட்டளையிடுவான்: ‘உலகத்தில் சிரமத்தில் தவித்த என் அடியான் இங்கே வந்து ஓய்வு எடுத்து நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக சொர்க்கமே உன்னை அலங்கரித்துக்கொள்’.

எனவே ஒரு மனிதன் நோன்பு பிடிக்கத் தொடங்கிய காலம் முதல் சொர்க்கம் செல்லும் வரை அந்த மனிதனுக்காக சொர்க்கம் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.

நோன்பு வைத்து அதன் மூலம் பெற்ற நன்மையால் சொர்க்கம் செல்லும் அடியான் அந்த சொர்க்கத்தின் சிறப்பைப்பார்த்து இவ்வாறு கூறுவானாம்: ‘வருடத்தில் ஒரு மாதம் தானே நோன்பு வைத்தேன். அதற்கே இவ்வளவு அழகான சொர்க்கமா?. இது முன்பே தெரிந்திருந்தால் வருடம் முழுவதும் நோன்பு நோற்று அதிக நன்மைகள் செய்திருப்பேனே’.

மனிதன் கற்பனை செய்து பார்க்க முடியாத பல்வேறு சிறப்புகளைப்பெற்ற சொர்க்கத்தில் நாம் அனைவரும் இடம்பெற உதவும் இந்த ரமலான் மாதத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முறையாக நோன்பு வைத்து, தொழுகையில் ஈடுபட்டு, தான தர்மங்கள் செய்து, பாவமன்னிப்பு கேட்டு இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபடி இந்த ரமலானில் நாம் அதிகமதிகம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து நரகத்தை விட்டு பாதுகாப்பு தேடி, சொர்க்கத்தை கேட்க வேண்டும். அதிலும் குறிப்பாக நோன்பு கடமையை நிறைவேற்றுபவர்களுக்கு என்று ஒரு சொர்க்கம் உண்டு. அதன் பெயர் ‘ரய்யான்’.

மறுமை நாளில் ஒரு மனிதனின் பாவ புண்ணிய கணக்குகள் இறைவன் முன்பு சமர்ப்பிக்கப்படும். அப்போது அந்த மனிதன் தத்தளித்துக்கொண்டு இருப்பான். அப்போது இறைவன் தரப்பில் இருந்து, ‘ரமலான் மாதங்களில் நோன்பு வைத்திருப்பவர்கள் எங்கே?’ என்று ஒரு அழைப்பு வரும். இதைக்கேட்டு நோன்பு வைத்தவர்கள் எழுந்து நிற்பார்கள்.

அப்போது அவர்களைப்பார்த்து இறைவன், ‘நீங்கள் அனைவரும் ‘ரய்யான்’ என்ற இந்த சொர்க்கச்சோலைக்குள் செல்லுங்கள்’ என்பான். இதையடுத்து நோன்பாளிகள் அனைவரும் அந்த வழியாக சொர்க்கத்திற்குள் செல்வார்கள். கடைசி நோன்பாளி சென்றதும் அந்த வழி மூடப்படும்.

“எவர் நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரத்தில் அவரின் தாகம் நீங்க நீர் வழங்கினாரோ அவருக்கு, மறுமையில் ‘ஹவ்ழுல் கவ்தர்’ என்ற நீர் தடாகத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீர் வழங்குவான். அதன் மூலம் சொர்க்கம் செல்லும் காலம் வரை அவருக்கு தாகம் என்பது ஏற்படாது” என்பது நபி மொழியாகும்.

எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘நன்மையான காரியங்களை போட்டிபோட்டுக்கொண்டு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துவார்கள்.

இந்த ரமலான் முழுவதும் பிறர் நலன் பேணிவாழக்கூடிய நல்ல மக்களாக நம்மை எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கியருளுவானாக, ஆமின்.

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)