புகைப்படம் எடுத்து காவலர்களுக்கு அனுப்பும் நவீன சி.சி.டிவி - மதுரை காவல்துறை அசத்தல்

 


தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணியாமல் சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு காவல்துறையினரோ, வருவாய்துறையினரோ அபராதம் விதித்து வந்தனர். இதனால், மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் அபராதத்தை தவிர்க்க போலீஸ் இருக்கிறார்களா, அபராதம் விதிக்கிறார்களா என பார்த்து பார்தது செல்வார்கள்.

ஆனால் மதுரை திலகர் நகர், விளக்குத் தூண் பகுதிகளில் அப்படி யாரும் போலீசார் பார்வையில் இருந்து தப்பி சென்றுவிட முடியாது. ஏனென்றால் தெருவில் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களை சிசிடிவியின் மூலமே கண்டுபிடித்து விடுகிறார்கள் போலீசார்.

இந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிசிடிவி கேமராக்களில் FIRST ZOOM APP என்ற மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த பகுதி சாலையிலோ, தெருவிலோ யாராவது முகக்கவசம் அணியாமல் சென்றால் இந்த மென்பொருள் அவரை மட்டும் புகைப்படம் எடுத்து விடும். உடனடியாக அந்த படம் காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும்.

அங்கிருந்து சிசிடிவி உள்ள பகுதியின் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளரின் செல்போன்களில் உள்ள பிரத்யேக ஆப்பிற்கு அனுப்பப்படும். அதில் எப்போது எங்கே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்ற விவரம் இருக்கும். அதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்டவரை கண்டுபிடித்து காவலர்கள் அபராதத்தை வசூல் செய்கின்றனர்.

முதற்கட்டமாக பெரியார் பேருந்து நிலையம், பாண்டி பஜார், தமிழ்சங்க சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த மென்பொருளுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் மதுரை முழுவதும் இந்த சிசிடிவி கண்காணிப்பை நடைமுறைப்படுத்த காவல்துறை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.