கண்ணகிநகரில் பணப்பட்டுவாடா: அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு

 


சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கண்ணகிநகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்தபோது திமுகவினர் கையும் களவுமாக பிடித்து கண்ணகிநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் பட்டுவடா செய்து கொண்டிருந்த தகவல் அறிந்த அப்பகுதி திமுகவினர் விரைந்து சென்று அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது, ஒரு ஓட்டுக்கு ரூபாய் 500 என ஒவ்வொரு குடும்பத்தில் எத்தனை ஓட்டு உள்ளது என கணக்கிட்டு, 1000, 1500, 2000 என வழங்கியதாக கூறப்படுகின்றது. அப்போது பேப்பரில் எழுதிவைத்திருந்த பெயர் பட்டியலும் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். லஞ்சம் அளித்தல் (171e) பிரிவில் அதிமுகவினர் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கம் ராகவேந்திரா 2வது தெருவில் பணம் பட்டுவாடா செய்திருந்ததாக அதிமுக சோழிங்கநல்லூர் அம்மா பேரவை பகுதி செயலாளர் கோபி உள்ளிட்ட 3 பேர் மீது தேர்தல் நேரத்தில் லஞ்சம் கொடுத்ததாக 171e என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.