ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலட்சியம்;கால் ஒடிந்த இருவரை மழையில் விட்டுச்சென்ற அவலம்..

 


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மாலை 6 மணிக்கு காற்றுடன் கனத்த மழை பெய்தது. அப்போது, ராசிபுரத்தில் வசிக்கும் பீகாரை சேர்ந்த வாலிபர்கள் அமிலேஷ் (26) ராஜேஷ் (24) ஆகிய இருவரும் தங்களது இரண்டு சக்கர வாகனத்தில் சேலத்தில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அதேபோல, மல்லூர் சுபாஷ் நகரை சேர்ந்த மணிகண்டன் (24) பூபாலன் ( 28) ஆகிய இருவரும் ராசிபுரத்தில் இருந்து மல்லூர் நோக்கி தங்களது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

ராசிபுரம்- சேலம் பிரதான சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது.

இதில், நான்கு பேரும் பலத்த காயமடைந்து மழையில் துடித்துக் கொண்டிருந்தனர். சுமார் அரைக்கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வரவே 30 நிமிடங்கள் ஆனதாகச் சொல்லப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்களும் இரண்டு பேரை மட்டும் தூக்கிச்சென்றுள்ளனர்.

சாலையில் மழையில் துடித்துக்கொண்டிருந்த மற்ற இருவரையும் தூக்கி செல்ல கேட்டபோது, ஆம்புலன்ஸ் ஊழியர் முடியாது என்று வேகமாக சென்றுள்ளார்.இதனால், கால் ஒடிந்த நிலையில் கிடந்த மற்ற இருவரும் மழையில் துடித்துக் கொண்டிருந்தனர். 

அதனைத்தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு பின்னர் வந்த ஆம்புலன்ஸ் மற்ற இருவரையும் தூக்கிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. 

அந்த நேரத்தில் கால் ஒடிந்த நபர்களின் உடலில் இருந்து அதிகளவு ரத்தம் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

அங்கிருந்த பொதுமக்கள் எவ்வளவு சொல்லியும் அலட்சியமாக சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்களால், படுகாயமடைந்த இரண்டு பேர் மழையில் நனைந்தபடி துடித்துக் கொண்டிருந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.