தமிழக எல்லையில் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு: இ-பாஸ் கட்டாயம் என்பதால் வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

 


தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து நோய் பரவலை குறைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


அதனைதொடர்ந்து அரசின் புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி பாண்டிச்சேரி மாநில வாகனங்களை தவிர்த்து மற்ற ஒவ்வொரு மாநில வாகனங்களும் தொலைபேசி வாயிலாக இ - பாஸிற்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் சுகாதார, வருவாய், போலிஸ் அதிகாரிகளால் அனுமதிக்கப்படுகின்றனர்.

இ - பாஸ் இல்லாத வாகனங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கே திருப்பி அனுப்பி வருகின்றனர். கர்நாடக மாநில வாகனங்கள் இ -பாஸ் விண்ணப்பிப்பதற்காக சாலையோரங்களில் கார்களை வரிசையில் நிறுத்தி வைத்து காத்து வருகின்றனர்.

தமிழகத்திற்கு அனுமதிக்கப்படும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்தும், ஓட்டுநரின் உடல் வெப்பத்தை பரிசோதித்து தான் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

செய்தியாளர் - செல்வா