ஸ்டிராங் ரூம் சாவி கொத்துடன் தேர்தல் நடத்தும் அலுவலர்;இவிஎம் மையத்தில் பரபரப்பு..

 


வாக்கு எண்ணும் மையத்திற்கு ஸ்டிராங் ரூம் சாவி கொத்து மற்றும் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தும் சீல் கட்டை உள்ளிட்ட பொருட்களோடு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களை அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஆரம்பம் முதலே இங்கு வாக்கு இயந்திரத்தின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட வண்ணம் உள்ளது. காம்பவுண்டு சுவர்களில் ஆட்கள் நுழையும் அளவிற்கு துவாரங்கள் இருந்தது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் கதவுகள் மீது லேசர் லைட், அடிக்கடி இரவு நேரங்களில் மின் தடை போன்ற குளறுபடிகளால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வாக்கு எண்ணும் மையத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

*வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அண்ணா பொறியியல் கல்லூரியில் நேற்று (27.04.2021) பிற்பகல் 3 மணியளவில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சக்திவேல், அனுமதி பெறாத ஒரு காரில் வந்தார். இதனை சிசிடிவி கேமராவில் கவனித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், உடனடியாக நுழைவு வாயில் முன்பு குவிந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் வந்த காரை சோதனை செய்தனர். அதில் ஸ்டிராங் ரூம் சாவி, வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்பட்ட அரசு சீல் கட்டை, நாடா, ரப்பர், கத்திரிக்கோல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும் அட்டை, தபால் ஓட்டு படிவம் 12 உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தெரிந்ததும் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டி, திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காமாட்சி ஆகியோர் அங்கு வந்தனர். *

வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்பட்ட பொருட்களை திடீரென்று கொண்டு வந்தது குறித்து சக்திவேலிடம் விசாரித்தனர். அதற்கு அவர், “வாக்குப்பதிவு அன்று பயன்படுத்தப்படும் பொருட்களை தலையாரிகள் தாலுகா அலுவலகத்தில் வைத்து விட்டனர். அதை நான் தவறுதலாக கொண்டு வந்துவிட்டேன்” என கூறினார். மேலும் ஸ்டிராங் ரூம் சாவி கொத்து கொண்டு வந்தது குறித்து கேட்டபோது, குழப்பமான பதில்களையே கூறியுள்ளார். அவரிடம் விசாரித்த பிறகு திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காமாட்சி, தபால் ஓட்டு படிவம் 12 மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும் அட்டையைக் கிழித்து எறிந்துவிடுங்கள் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் மேற்கண்ட இரண்டு பொருட்களையும் கிழித்தெறிந்துவிட்டு, மற்ற பொருட்களைப் பாதுகாப்பு பணியிலிருந்த அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கல்லூரிக்கு ஸ்டிராங் ரூம் சாவி கொத்தோடு, வாக்குப்பதிவு அன்று பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கொண்டு வந்தது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா