தேனி மாவட்டம், மேகமலை மலைவாழ் கிராமத்தில் சட்டமன்றத் தேர்தலில் தங்களது வாக்கினை பதிவு செய்ய பேருந்து வசதியின்றி வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் கிராம மக்கள்:

 


தேனி மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் பிரபலமாகி வரும் மேகமலை பகுதியில் உள்ள ஒருசில மலை கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி  இல்லாததால் முழுமையான 100 சதவிகிதம் வாக்குகள் பதிவு செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது. 

கடந்து ஒரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் சாலை சீரமைக்கும் பணியின் காரணமாக அரசு பேருந்து மேகமலை,ஹைவேவிஸ்,மணலார் மற்றும் அப்பர்மணலார் வரையில் மட்டுமே இயக்கப்படுகின்றது.

இவ்வாறான சூழலில்,இப்பகுதிகளுக்கு மேலே உள்ள வென்னியார், இரவங்கலார் மற்றும் மகாராஜமெட்டு ஆகிய பகுதிகளுக்கு சாலை சீரமைப்பு பணியினால் அரசுப்பேருந்து ஒரு வருடங்களுக்கு மேலாக  செல்வதில்லை. இதனால் அப்பகுதி வாழ் மக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு சென்றுவர சிரமம் ஏற்பட்டிருந்த நிலையில்

ஒரே ஒரு தனியார் ஸ்ரீஹரி பேருந்து மட்டும் அப்பகுதி மக்களின் தேவைகளுக்காக அங்கு சென்று வந்து கொண்டு இருந்தது. அதுவும் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வருடாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக  நிறுத்தப்பட்டடுள்ளது. 

அப்பகுதி மக்களுக்கு எந்த ஒரு பொது போக்குவரத்து வசதி இல்லாததால் வென்னியார், இரவங்கல்லார் மற்றும் மகாராஜமெட்டு ஆகிய பகுதிகளில் முழுமையான வாக்குகளை எப்படி பதிவு செய்வதென்பது கேள்விக்குறியாக திகழ்ந்து வருகிறது. 

இதனால்,இப்பகுதியில் உள்ள சுமார் 100ற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பேருந்து வசதி இல்லாமல் தங்களது பகுதிகளிலிருந்து வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்வதில் சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது.

வாக்குச்சாவடி மையங்களாக அரசின் ஒத்துழைப்பும்,பேருந்து வசதியானது முற்றிலும் இல்லாத இரவங்கலார் பஞ்சாயத்து யூனியன் பள்ளி,வென்னியார், மகாராஜாமெட்டு அரசு துவக்கப்பள்ளிகள் தான் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படுகிறதென்பது தேர்தல் ஆணையம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

அது சமயம், வென்னியார், இரவங்கல்லார் மற்றும் மகாராஜமெட்டு பகுதி மக்கள் தங்களது வாக்குகளை 100 சதவிகிதம் பதிவு செய்திட தேர்தல் ஆணையமும்,மாவட்ட நிர்வாகமும் காலதாமதமின்றி உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வாக்குப்பதிவானது முழுமையாக நடைபெற வேண்டுமென அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.- நிருபர் வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்