குப்பை லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட வென்டிலேட்டர்; குஜராத் பா.ஜ.க அரசின் அலட்சியத்தின் உச்சம்!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
இருந்தபோதும், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராமல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் வென்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால் மாநில அரசுகள் எண்ணச் செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி கிடக்கின்றன.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில், குப்பை லாரியில் வென்டிலேட்டர்கள் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மேலும் தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குஜராத் அரசு வால்சாட்டில் இருந்து சூரத்துக்கு 34 வென்டிலேட்டர்களை கொண்டு செல்ல முடிவு செய்தது.
இதன்படி, சூரத் மாநகராட்சி வால்சடில் இருந்து வென்டிலேட்டர்களைப் பெற குப்பை லாரியை அனுப்பியுள்ளது. குப்பை லாரிகளில் வென்டிலேட்டர்கள் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் குஜராத் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த வால்சடி மாவட்ட ஆட்சியர் குப்பை லாரியில் வென்டிலேட்டர்கள் கொண்டு செல்லப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.