நடிகர் விவேக் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் தற்காப்புக்கலை நிபுணரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி

 


கல்லூரி நண்பர், திரையுலகில் ஒன்றாகப் பயணித்தவர், நலம் விரும்பி என்கிற முறையில் நடிகர் விவேக் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் தற்காப்புக்கலை நிபுணரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத `ஜனங்களின் கலைஞன்’ நடிகர் விவேக்குடைய எதிர்பாராத மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மூட நம்பிக்கைகளையும், மக்களின் அறியாமையையும் தனது நகைச்சுவை மூலம் சுட்டிக்காட்டியவர். நகைச்சுவைக் கலைஞனாக மட்டுமே தனது திரைப்பயணத்தை சுருக்காமல், பல குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலமாகவும் நம்மை நெகிழ வைத்தவர்.

கல்லூரி நண்பர், திரையுலகில் ஒன்றாகப் பயணித்தவர், நலம் விரும்பி என்கிற முறையில் நடிகர் விவேக் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் தற்காப்புக்கலை நிபுணரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி.

``அமெரிக்கன் கல்லூரியில் நான் படிக்கும்போதும் மற்றும் கவிதாலயாவில் வேலைக்குச் சேர்ந்தபோதும் விவேக் எனக்கு ஜுனியர். எங்களுடைய முதல் சந்திப்பே சுவாரஸ்யமானது. அப்போ நான் கல்லூரியில ஒரு கராத்தே டெமோ போட்டு அது மாணவர்கள் மத்தியில பெரிய ஹிட் ஆச்சு.

`அந்த கராத்தே டெமோவை கிண்டல் பண்ணி, ஜூனியர் பையன் ஒருத்தன் நாடகம் போட்டுட்டு இருக்கானாம். பயங்கர க்ளாப்ஸ்...'னு அந்தத் தகவலை எனக்கு மற்ற மாணவர்கள் சொன்னாங்க. அதைக் கேட்டதும் எனக்கு பயங்கர கோவம் வந்து, அங்கே நான் உடனே போய், நாடகத்தைப் பாதியிலயே நிறுத்துனு தகராறு ஆச்சு.

அப்போ என்கிட்ட பேசின விவேக், ``உங்களுடைய கராத்தே எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். உங்களை மாதிரி என்னால ஓடு, செங்கல் எல்லாம் அடிக்க முடியாது. அதனால் அப்பளம் உடைச்சேன். நீங்க என்னை அடிக்கிறதா இருந்தா அடிச்சுக்கோங்க”னு சொல்ல, நான் கோவத்தை மறந்து சிரிச்சுட்டேன்.

அதுக்குப் பிறகு எங்களுக்குள்ள நல்ல நட்பு உருவாச்சு. கல்லூரி நாள்கள்ல நாடகம், காமெடி, மிமிக்ரினு ரொம்ப ஆக்டிவ்வா இருந்தவர் விவேக். கல்லூரி நாள்கள்லேயே சமூக சிந்தனைகளும் இயற்கை ஆர்வமும் அவருக்கு ரொம்பவே இருந்தது. இசையார்வமும் அதிகம். வில்லுப்பாட்டு, கதாகலாட்சேபம்னு இப்படி பல விஷயங்களை பண்ணிட்டே இருப்பார்.

கல்லூரி முடிச்சுட்டு என்னதான் அரசுப் பணிக்குப் போனாலும் அவருடைய கனவு முழுக்கவே சினிமாவாதான் இருந்தது. கல்லூரிக்கு எதிரே இருக்கக்கூடிய ஒரு டீக்கடையில உட்கார்ந்து சினிமா குறித்தும் எங்களோட நடிப்புப் பயிற்சி, ஆர்வம் குறித்தும் மணிக்கணக்காகப் பேசியிருக்கோம்.

இயக்குநர் பாலசந்தர் மூலமா கதாநாயகனா அறிமுகமாகணும் என்பதுதான் எங்க ரெண்டு பேருக்குமே கனவு. நான், 1987-ல `புன்னகை மன்னன்’ படம் மூலமா அறிமுகமானேன்.

அதுக்குப் பிறகு விவேக் பாலசந்தர் சார்கிட்ட தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார். சார் விவேக் பத்தி என்கிட்ட விசாரிப்பார். பிறகு, அதே வருஷம் `மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலமா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் விவேக். ஆரம்ப நாள்கள்ல குணச்சித்திர கதாபாத்திரங்கள், அப்புறம் காமெடினு டிராக் மாறினாலும், அவருக்குக் கதாநாயகனா நடிக்கணும் என்பதுதான் பெரிய கனவா இருந்தது. காமெடியன் பிம்பத்துக்குள்ள மட்டுமே அடைபட அவருக்கு விருப்பமே இல்லை.

கதாநாயகனா நடிக்கத் தொடர்ந்து முயன்றுகொண்டே இருந்தாரு. சில படங்கள் கதாநாயகனா நடிச்சிருந்தாலும் அது வொர்க்கவுட் ஆகலை. அதுக்குப் பிறகுதான் காமெடியனா தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சாரு.

கல்லூரிக் காலத்திலேயே சமூக சிந்தனையும், சீர்திருந்த கருத்துகளும் கொண்டவர். கதாநாயகனாகி அதைத்தான் திரையில தரணும்னு நினைச்சார். அது சரியா அமையாம போகவே, காமெடியனா நகைச்சுவையோட தன்னுடைய கருத்துகளையும் முன்வைத்தார். அந்த விஷயம்தான் அவரை சின்ன கலைவாணரா, மக்களின் கலைஞனா திரையுலகத்துல முன்னிறுத்துச்சு.

நானும் அவரும் `பத்ரி’ படத்துல சேர்ந்து நடிச்சிருப்போம். அதுக்குப் பிறகு, ரெண்டு பேரும் சேர்ந்து படங்கள் பண்ணணும்னு பல முறை பேசியிருக்கோம். ஆனா, அது நடக்காம போயிருச்சு. அவர்கூட நான் முதல் முறை சேர்ந்து நடிச்ச `பத்ரி’ படமே கடைசி படமாவும் ஆகிடுச்சு.

சில வருஷங்களுக்கு முன்னாடி அவரோட மகன் இறந்தபோதும், அவர் அம்மாவின் இழப்பின்போதும் கடுமையான மன அழுத்தத்துல இருந்தாரு. அந்த சமயங்கள்ல அவர்கிட்ட நிறைய ஆறுதல் வார்த்தைகள் சொல்லியிருக்கேன். அதுல இருந்து ஓரளவுக்கு மீண்டு வந்து மறுபடியும் படங்கள், சமூகப் பணிகள்னு கவனம் செலுத்திட்டு இருந்தாரு.

அரசு மருத்துவமனைகள் மேல மக்களுக்கு இருக்குற பயம் போகணும், தடுப்பூசி பத்தின விழிப்புணர்வு வரணும்னுதான் அவர் தடுப்பூசி போட்டுக்கிட்டார். ஆனா, இப்படி ஆகும்னு யாருமே நினைக்கல. நல்லா ஆரோக்கியமா, தினமும் உடற்பயிற்சிகள் செஞ்சுட்டு ஆக்டிவ்வா இருந்தவருக்கு திடீர்னு கார்டியாக் அரெஸ்ட்னா, என்ன சொல்றதுனு தெரியல.

விவேக்கின் நீண்டகால நண்பரான எனக்கு, அவரோட இழப்பை இன்னும் ஏத்துக்க முடியலை. அவருடைய கதாபாத்திரங்களும் கருத்துகளும் எப்பவும் மக்கள்கிட்ட இருக்கும்.

சின்ன கலைவாணருக்கு அஞ்சலி!''

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)