பயமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் - சென்னை கமிஷனர் மகேஷ்குமார்

 



தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினருடன் சேர்ந்து 30 ஆயிரம் போலீசார் சென்னையில் ஈடுபட உள்ளதாகவும், விதிகளை மீறி சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரையில் யாராவது ஈடுபடுகிறார்களா? என்பதனை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருவதாகவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் 2021 பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, "சென்னை காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில், 2083 வாக்குப்பதிவு இடங்களும், 11872 வாக்குச்சாவடிகளும் உள்ளது. அதில், 327 பதற்றமான வாக்குப்பதிவு இடங்களில் 1349 வாக்குச்சாவடி மையங்களும், 10 மிகவும் பதற்றமான வாக்குப்பதிவு இடங்களில் 30 வாக்குச்சாவடி மையங்களும் அமைந்துள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரு காவலர் மற்றும் சிறப்பு காவலர்களால் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும். மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் துணை ராணுவத்தினரும் காவலர்களும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் துணை ராணுவத்தினரும் போலீசாரும் வாக்குப்பதிவு இடங்களில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.


லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரி ஆகிய 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளுக்கு துணை ராணுவத்தினர், காவலர்களால் பாதுகாப்பு மேற்கொள்ளப்படுவதோடு; 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

சென்னை முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 371 வழக்குகளும், தேர்தலுக்கு முந்தைய நாட்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து 18 வழக்குகளும், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியதாக 605 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன தணிக்கையின் போது சுமார் 44.11 கோடி ரூபாயும், சுமார் 50 கிலோ தங்கநகைகள், சுமார் 119 கிலோ வெள்ளி நகைகள் சுமார் 8.5 சென்டு வைர நகைகள் மற்றும் 2889 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த புகாரில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகர காவல்துறையில் உள்ளூர் காவல்துறை, ஆயுதப்படை காவலர்கள் உள்பட சுமார் 23,500 காவல் துறையினரும், 18 மத்திய படையினரும், 10 சிறப்பு காவல் படையினரும், 3000 சென்னை ஊர்க்காவல் படையினரும், 1800 கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினரும், 700 ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் இராணுவத்தினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


இன்று இரவு 7 மணிக்கு பிறகு வெளியாட்கள் சென்னைக்குள் தங்கியிருக்கக் கூடாது. இதனை கண்காணிக்கவும் சோதனை செய்யவும் அந்தந்த காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை மீறி தங்கியிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல், விற்கப்படுவதை காவல்துறை தீவிரமாக கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளும். இதனை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைதியான முறையில் தேர்தல் நடத்த சென்னை காவல்துறையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க சென்னை, வேப்பேரி, சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு உருவாக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள். தேர்தல் சம்பந்தமான புகார்களை 044-23452437, 9498181239 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

சென்னையில் உள்ள 792 மொபைல் பார்ட்டிகளையும் மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளிலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று பின்னர் வாக்குப்பதிவு முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்வதை கண்காணிக்க மொபைல் செயலி உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

தேர்தல் பரப்புரை முடிந்த பிறகு வெளிஆட்கள் யாரும் தொகுதிக்குள் இருக்க கூடாது. அதனை மீறியும் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு மையங்களுக்குள் யாரும் செல்போன்களை கொண்டு செல்லக்கூடாது.

தேர்தல் பரப்புரைக்கான காலம் முடிந்த பிறகு சமூக வலைதளங்கள் மூலம் யாரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபடக்கூடாது. சமூக வலைதளங்கள் மூலம் யாராவது தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதனை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அமைதியான முறையில் தேர்தல் நடத்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். பொதுமக்கள் பயமில்லாமல் சுதந்திரமாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்ய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை செய்துள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்குப்படும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துவிடும். வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் சுமார் 3 ஆயிரம் சிசிடிவிகள் பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து காவல் துறையினரும் ஆய்வு செய்வார்கள். வாக்குகள் எண்ணுவதற்கு ஒரு மாத கால அவகாசம் இருப்பதால் பாதுகாப்பை தீவிரப்படுத்துவோம். தேவைப்பட்டால் கூடுதலாக்குவோம்" என்று சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!