தாயை முட்புதரில் வீசி சென்ற 'பாசக்கார' மகன்

 


பொன்னேரி : முதியோர் விடுதியில் விடுவதாக கூறி, தாயை அழைத்து வந்த மகன், முட்புதரில் வீசி சென்றதை தொடர்ந்து, போலீசார் மீட்டு, மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்தனர்.


திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, ஏலியம்பேடு கிராமம் அருகே, சாலையோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில், வயதான பெண் ஒருவரின் முனகல் சத்தம் கேட்டது.பொதுமக்கள், முட்புதரின் அருகே சென்று பார்த்தபோது, அங்கு, 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், எழுந்திருக்க முடியாமல் இருப்பதை கண்டனர்.அவரை மீட்டு, பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று, மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மணலி சேக்காடு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி காந்திமணி என்றும், தன் மகன்கள் தன்னை பார்த்துக் கொள்ளவில்லை எனவும், இளைய மகன் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதாக கூறி, 'பைக்'கில் அழைத்து வந்து, இங்கு விட்டு சென்றதாக, போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் மூதாட்டியை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். மூதாட்டி கூறிய விபரங்களை வைத்து, போலீசார், அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.