அதிமுக வேட்பாளர் பங்களா, அதிமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல்.... போலீசார் வழக்கு!
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவுபெற்ற நிலையில் நாளை மறுநாள் வாக்குப்பதிவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழகம். தேர்தலையொட்டி அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இதுவரை 428.46 கோடி பணம் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 225.5 கோடி ரொக்கமும், 176.11 கோடிக்கு ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4.61 கோடிக்கு மதுபானங்கள், 20.01 கோடிக்கு பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் சுகுமார் மற்றும் அவரது மகன் கோபி மீது 7 பிரிவுகளில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர் சுகுமாரன் பங்களாவிலிருந்து 96 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி பி.என்.புதூரில் திமுக அலுவலகத்தில் இருந்து 5.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் தேர்தல் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.