பாலியல் தொல்லை வழக்கு; விசாரணையை 6 வாரத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு


 தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதியிடம் அந்த பெண் எஸ்.பி. புகார் அளித்தார். 

இதையடுத்து, சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை மூடி முத்திரையிட்ட உரையில் காவல்துறை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, ஏற்கனவே விசாகா கமிட்டியின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, முடிவுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார். 

இதையடுத்து நீதிபதி இன்னும் விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். அப்போது விசாரணை அதிகாரி சார்பில், 4 முதல் 8 வாரங்கள் ஆகும் என தெரிவித்தார்.

இதையடுத்து, சிறப்பு டிஜிபி மீதான வழக்கை 6 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அரசிடம் அனுமதி பெற்று சம்மந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜூன் மாதம் 18 ம் தேதி ஒத்திவைத்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)