சென்னை வந்த பள்ளி மாணவனிடம் ரூ.63,500 பணம் பறித்த காவலர்கள் சஸ்பெண்ட்!
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தைச் சேர்ந்த அந்தோனி செல்வத்தின் மகன் கிங்ஸ்டன் கிஷோர் (17). இவர் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கிஷோர் பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு வீட்டிலிருந்த 63,500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்து மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அதிகாலை 2 மணியளவில் அங்கு ரோந்து பணியிலிருந்த சி.எம்.பி.டி காவல் நிலைய குற்றபிரிவு முதல்நிலை காவலர்களான வேல்முருகன் மற்றும் அருண்கார்த்திக் ஆகியோர் மாணவன் கிங்ஸ்டன் கிஷோரை வழிமறித்து தாக்கி கையிலிருந்த 63,500 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு சென்றுள்ளனர்.
எங்கு செல்வது என தெரியாமல் விழி பிதுங்கிய மாணவன் இறுதியாக தனது தந்தை அந்தோனி செல்வத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். வீட்டை விட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த போது தன்னிடம் இருந்த பணத்தை காவலர்கள் பறித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுவனின் தந்தை சி.எம்.பி.டி காவல் நிலையம் வந்து சட்டம் ஒழுங்கு ஆய்வாளரிடம் புகாரளித்தார். சட்டம் ஒழுங்கு ஆய்வாளர், மதுரவாயல் உதவி ஆணையாளர் ரமேஷ் பாபுவை சந்தித்து சம்பவம் பற்றி கூறி சிறுவனின் தந்தையை அழைத்துக்கொண்டு சென்றார்.
உதவி ஆணையர் ரமேஷ் பாபு, காவலர்கள் வேல்முருகன் மற்றும் அருண் ஆகியோரை விசாரித்தபோது சிறுவனிடம் பணம் பறித்த சம்பவம் உண்மை என தெரிய வந்தது.
புகாரை தொடர்ந்து காவலர் வேல்முருகன் சிறுவனின் தந்தைக்கு கால் செய்து கைபேசியில் அழைப்பு செய்து ரூ.2 லட்சம் பணம் தருவதாகவும் இந்த சம்பவத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
சிறுவனின் தந்தை ரூ.2 லட்சம் வேண்டாம் தன் மகனிடம் பிடுங்கிய பணத்தை கொடுக்க வேண்டும் எனவும் கொடுத்தாலும் புகாரை வாபஸ் வாங்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
மேலும், உயரதிகாரிகள் விசாரணையில் இந்த சம்பவம் மட்டுமல்லாமல் காவல் நிலையத்துக்கு வருபவர்களிடம் மிரட்டி அதிக அளவு பணம் வாங்குவது, கடைகளை மிரட்டி பணம் வாங்கியது தெரிய வந்தது.
இந்த நிலையில் சென்னை காவல் இணை ஆணையாளர் மேற்கு ராஜேஸ்வரி பள்ளி மாணவனிடம் ரூபாய் 63 ஆயிரத்து 500 பணத்தை பறித்துக் கொண்ட சிஎம்பிடி காவல்நிலைய குற்ற பிரிவு காவலர்கள் வேல்முருகன் மற்றும் அருண் கார்த்திக் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் மக்களுக்கு பல உதவிகள் செய்து வரும் பல காவல்துறையினருக்கு மத்தியில், 2 காவலர்கள் சிறுவனிடம் பணம் பறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.