பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக அதிமுக வேட்பாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் வேட்பாளர் ராமு. இந்நிலையில் காட்பாடி அடுத்த கல்புதூர் மெட்டுக்குளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான உணவகத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக சிலர் பட்டியல் தயாரித்து வைத்திருப்பதாகவும், பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய புகார் வந்தது.
இதையடுத்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சண்முகசுந்தரம் மற்றும் காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான புண்ணியகோட்டி மற்றும் டி.எஸ்.பி உட்பட 50 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேற்று நள்ளிரவு 1.00 மணி அளவில் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சிலர் பூத் சிலிப்களையும், காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு படம் மற்றும் அக்கட்சியின் சின்னம், வாக்குறுதிகள் பொறிக்கப்பட்டிருந்த தேர்தல் துண்டுப் பிரசுரங்களையும் கட்டுக்கட்டாக வைத்திருந்ததும், மேலும் அவர்கள் கவர்களில் பணத்தை பிரித்து போடும் பணியை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. உடனடியாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவின் பேரில் அங்கிருந்த 8 பேரையும் கையும் களவுமாக பிடித்த காட்பாடி காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் கூறுகையில், ''காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் தனியார் உணவகத்தில் வைத்து அதிமுக தரப்பில் இருந்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்த ரூ.18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில் 1,300 ரூபாய் தவிர மற்றவை 500 ரூபாய் நோட்டுகள் ஆகும். மேலும் பணப்பட்டுவாடா தொடர்பான வாக்காளர் விவரம் அடங்கிய பூத் சிலிப்புகள், அதிமுக வேட்பாளரின் படம் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் இதுவரை வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய நபர்களின் பெயர் குறிப்பிடப்பட்ட பட்டியல்களும், எவ்வளவு பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற விவரமும், ஒரு லேப்டாப், 4 மது பாட்டில்கள், பண பரிவர்த்தனை தொடர்பான வங்கி ஆவணங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை நீடித்தது. அதைத்தொடர்ந்து காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்படும் பணம் 10 லட்சத்திற்க்கு மேல் இருந்தால் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட 18,41,300 ரூபாய் வேலூர் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற ஆவணங்களை வைத்து பார்க்கும் போது காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட வார்டுகளுக்கு ஓட்டுக்கு பணம் விநியோகித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. கிடைக்கப்பெற்ற ஆணங்களில் எந்த பகுதிக்கு யார் மூலம் எவ்வளவு பணம் விநியோகிக்கப்பட்டது என்ற விவரம் பணம் விநியோகித்தவரின் செல் நம்பருடன் பதிவாகியுள்ளது. அதன்படி ஒரு ஓட்டுக்கு 500 என காட்பாடி தொகுதிக்குட்பட்ட சேண்பாக்கம், காங்கேயநல்லூர், விருதம்பட்டு, தாராபடவேடு, செங்குட்டை, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 17 வார்டுகளுக்கு மொத்த பண விநியோகம் முடிந்துள்ளது. அதன்படி 9,264 பேருக்கு இதுவரை மொத்தம் 4,632,000 ரூபாய் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைப்பற்றப்பட்ட நோட்டுப் புத்தகத்தின் ஒரு பக்கத்தில், 569 பேருக்கு ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாகவும், மீதம் ரூ.8,000 இருந்ததாகவும், அதில் உடன் வந்தவர்களுக்கு ரூ.3000 கொடுத்ததாகவும் கணக்குகள் எழுதப்பட்டிருந்தன.
இது தொடர்பாக காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமுவின் சகோதரர் ஷோபன் பாபு உட்பட கோபிநாத், சரவணன், ராஜசேகர், மோகன், மோகன்குமார், நரேஷ், கணேஷ் ஆகியோரிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து காட்பாடி பறக்கும்படை அலுவலர் நரேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுக வேட்பாளர் ராமு உட்பட 8 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், அவதூறாக பேசுதல், அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், அதிகாரிகளை மிரட்டுதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கவர்ந்து வாக்குகளை பெற முயன்றல் உட்பட 5 பிரிவுகளின் (147, 294b, 353, 117e, 506(1) கீழ் காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.