மீண்டும் மூடப்படும் சுற்றுலாத் தலங்கள் : உதகையில் 45 ஆயிரம் குடும்பங்கள் வேலையிழக்கும் அபாயம்!
மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா மையமாகும். இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள், புல்வெளிக் காடுகள், குளு குளு காலநிலையை அனுபவிக்க ஆண்டுக்கு 33 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் உதகையில் ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்கள் கோடை சீசன் காலமாகும். இந்த காலங்களில் மட்டும் சுமார் 8 முதல் 12 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இவ்வாறு உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி சுற்றுலா வாகன ஓட்டிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வியாபாரிகள் போன்ற 45 ஆயிரம் குடும்பங்கள் சுற்றுலா தொழிலை நம்பி வாழ்ந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது.
இதனால் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் கோடை விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் 45 ஆயிரம் குடும்பங்கள் கடந்த டிசம்பர் மாதம் வரை வறுமையில் தவித்த நிலையில் ஜனவரி மாதம் முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் ரிஜிஸ்ட்ரேஷன் மூலம் தற்போது வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை முதல் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்து இருப்பதால் சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உட்பட அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்படுகிறது.
இதனால் உதகையில் உள்ள 45 ஆயிரம் சுற்றுலா தொழிலை நம்பி வாழ்ந்த தொழிலாளர்கள் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. எனவே தமிழக அரசு சுற்றுலா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு வந்து செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.