பட்டப்பகலில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினரை பிடித்த பறக்கும்படை

 


சென்னை ஆவடியில் பட்டப்பகலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 3 பேரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் அதிமுகவை சேர்ந்தவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரியா தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி, அம்சவேணி, பிரேம் ஆகிய மூவரும் வாக்காளர்கள் புகைப்படம் அடங்கிய பட்டியலோடு வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி வலியுறுத்தி, பணம் வினியோகம் செய்வதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து உடனே அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, அவரிடம் இருந்த ரூ. 92,000 பணத்தை பறிமுதல் செய்து ஆவடி போலீசில் ஒப்படைத்தனர். புகாரின்படி போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர். தேர்தல் நேரத்தில், வாக்காளர்களுக்கு அதிமுக பிரமுகர், பணம் பட்டுவாடா செய்து கையும், களவுமாக பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.