போலி ரெம்டெசிவிர் தொழிற்சாலை நடத்திய கும்பல் சுற்றிவளைப்பு: ஒரு போலி ஊசி ரூ.25,000க்கு விற்பனை செய்தது அம்பலம்!!

 
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த இக்கட்டான காலத்தை பயன்படுத்தி ஏமாற்றி வருமானம் பார்ப்பவர்களும் உருவாகி வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் லட்சங்களை தாண்டி பதிவாகி வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு, உயிர் காக்கும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு என சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தீவிர கொரோனா தொற்றாளர்களின் சிகிச்சைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பல் காவல்துறையினரிடம் சிக்கியிருக்கிறது.

ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியை அறிந்த உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆதித்ய கவுதம் என்பவர் போலி ரெம்டெசிவிர் ஊசிகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். அவர் நடத்தி வந்த போலி தொழிற்சாலை குறித்து அறிந்த டெல்லி காவல்துறையினர் அதிரடியாக களமிறங்கி ஹரித்வார், ரூர்கி மற்றும் கோத்வார் ஆகிய பகுதிகளில் சோதனை செய்தனர். போலீசார் நடத்திய சோதனையில் போலி ரெம்டெசிவிர் ஊசிகளை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர்.

அங்கிருந்து விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 196 போலி ரெம்டெசிவிர் ஊசிகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் போலி ரெம்டெசிவிர் மருந்துகளை நிரப்பக்கூடிய 3,000 காலி மருந்து குப்பிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவத்சவா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், போலி ரெம்டெசிவிர் தொழிற்சாலை நடத்தி வந்த ஆதித்ய கவுதம் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ரெம்டெசிவிர் ஊசி ஒன்றினை தலா 25,000 ரூபாய்க்கும் மேல் விலை வைத்து விற்பனை செய்துள்ளதும் தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கும்பல் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட போலி ரெம்டெசிவிர் ஊசிகளை விற்பனை செய்துவிட்டதாகவும், யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பதை கண்டறிய ஒரு பிரத்யேக போலீஸ் குழு ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாகவும், அக்குழுவினர் விற்பனை செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)