ரூ.2,000 டோக்கன்... ஏமாந்த மக்கள் - கடையைப் பூட்டிய உரிமையாளர்!

 


தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 72.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவது என அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சியினர் பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டனர்.

மேலும், பல இடங்களில் பணத்திற்கு பதிலாக டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் கறாராகச் செயல்படுவதால், வாக்குப்பதிவுக்குப் பிறகு பணம் வழங்கப்படும் எனவும் அ.தி.மு.க, அ.ம.மு.க கட்சிகள் உத்தரவாதம் அளித்துள்ளன.

அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அ.ம.மு.க தரப்பினர் ஓட்டுக்கு 2,000 ரூபாய்க்கு டோக்கன் வழங்கி மக்களை ஏமாற்றியுள்ளனர்.

கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் பிரியம் மளிகை ஏஜென்சி என்ற பெயரில் மளிகைக் கடை செயல்பட்டு வருகிறது. அந்தக் கடையின் பெயருடன் ரூ. 2,000 எனக் குறிப்பிடப்பட்ட டோக்கனை வழங்கி, அந்த மளிகை கடையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறி வாக்காளர்களுக்கு வழங்கியுள்ளனர் அ.தி.மு.கவினர்.

பொதுமக்கள் சிலர் அந்தக் கடையின் பெயர் பொறித்த டோக்கனை கொண்டு வந்து கொடுத்து, தங்கள் கடையில் இலவசமாக மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ள இந்த டோக்கன் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மளிகைக்கடை உரிமையாளர் இந்த டோக்கனுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடுத்துக்கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து டோக்கனுடன் வரும் கூட்டம் அதிகரிக்கவே அவர் கடையைப் பூட்டிவிட்டு, கடையின் கதவில் “வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த டோக்கனுக்கு எங்கள் கடை எந்த பொறுப்பும் ஏற்காது” என கதவில் எழுதி ஒட்டியுள்ளார்.

வாக்காளர்களுக்கு போலி டோக்கன் வழங்கி ஏமாற்றி, மளிகைக்கடை வியாபாரத்திலும் மண்ணள்ளிப்போட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு