ரெம்டெசிவர் விற்பனை; மருத்துவர் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்கள் என 2 நாட்களில் 8 பேர் கைது!

 


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இதனை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.

இதனை அடுத்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் கவுண்டர் திறக்கப்பட்டு ஒரு குப்பி மருந்து ரூ.2400 விற்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ரெம்டெசிவர் மருந்தை வாங்க கூட்டம் குவிந்து வருகிறது.

இதனை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் போலியாக மருத்துவர் பரிந்துரை சீட்டை தயாரித்து ரெம்டெசிவர் மருந்தை வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்து வருவது அதிகரித்துள்ளது.

சென்னை ஐசிஎப் பகுதியில் ரெம்டெசிவிர் மருந்தை தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக திருவல்லிக்கேணி மருந்து கட்டுபாட்டு துறை ஆய்வாளர் முரளி கிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெமிடெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்கும் நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து கள்ளச்சந்தையில் மருந்து விற்பனை செய்யும் நபருக்கு போன் செய்து தனக்கு ரெமிடெசிவிர் மருந்து உடனடியாக தேவைப்படுவதாக தெரிவித்தனர்.


இதனை நம்பிய அந்த நபர் இன்று மதியம் ரெமிடெசிவிர் மருந்துடன் ஐசிஎப் வடக்கு காலனி கமல விநாயகர் கோவில் அருகே காத்திருந்த காவலரிடம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மருந்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஐசிஎப் போலீசார் மற்றும் மருந்து கட்டுபாட்டு அதிகாரிகள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.


பின்னர் பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வில்லிவாக்கம் திருவீதியம்மன் கோவில் தெருவை சேரந்த கார்த்திகேயன்(33) என தெரியவந்துள்ளது. மேலும் இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு சென்னை மின்ட் தெருவில் உள்ள ஷர்வேவ் (shaarave) தனியார் மருத்துவமனையில் பார்மசி உதவியாளராக பணியாற்றி வருவது தெரியவந்தது.


மேலும் மருத்துவ பரிந்துரை சீட்டை போலியாக கொரோனா இருப்பது போல் தயாரித்து கொண்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் குறைந்த விலையில் விற்கக்கூடிய ரெமிடெசிவிர் மருந்தினை வாங்கி அதனை கார்த்திகேயன் கள்ளச்சந்தையில் 15,000 ரூபாய் வரை விற்று வந்தது தெரியவந்தது.


இதனையடுத்து கார்த்திகேயனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 ரெமிடெசிவிர் மருந்து குப்பிகளை பறிமுதல் செய்தனர். கார்த்திகேயன் அதே மருத்துவமனையில் நர்சாக பணிப்புரிந்து வரக்கூடிய ஜாபர் என்பவரின் ஆலோசனையின் பேரிலேயே விற்க முடிவு செய்ததாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜாபரையும் போலீசார் கைது செய்தனர்.


இதே போல புரசைவாக்கம் தாணா தெருவில் உள்ள நாராயணன் மருத்துவ மனையில் கொரோனா வார்டில் OT Tecnician & Physiotherapy-ஆக உள்ள கோடம்பாக்கத்தை சேர்ந்த சாம்பசிவம் (56) மற்றும் அதே மருத்துவமனையில் கொரோனா வார்டில் ICU-ல் Nurse ஆக பணிபுரிந்து வரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமன் (29) ஆகிய இருவர் போலி சான்றிதழ் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருந்தை வாங்கி அதனை பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக மயிலாப்பூர் துணை ஆணையர் தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மருந்து வாங்குவது போல போலீசார் இவர்களை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு வரச் செய்து கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல நேற்று தாம்பரத்தில் ரெம்டெசிவர் மருந்தை கள்ள சந்தையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்த மருத்துவர் முகம்மது இம்ரான் கான், அவரது கூட்டாளிகளான விஜய், விகேனேஷ், ராஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும், ரெம்டெசிவர் மருந்தை போலி ஆவணங்கள் மூலம் வாங்கி அதனை கள்ள சந்தையில் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததாக மருத்துவர், மருத்துவதுறை சார்ந்த ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கொரோனா நோயினால் பாதிப்படைந்த ஏழை நோயாளிகளுக்காக அரசு குறைந்த விலையில் ரெம்டெசிவிர் மருந்தினை வழங்கி வருவதாகவும், இதனை சமூக விரோதிகள் சிலர் பொய்யான சான்றிதழை தயாரித்து மருந்தை வாங்கி கள்ளச்சந்தையில் கொள்ளை லாபத்திற்கு விற்பதாக மருந்துகள் ஆய்வாளர் முரளி கிருஷ்ணன் தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும். எனவே பொதுமக்கள் பீதியடைந்து கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

கள்ளசந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்தால் தமிழ்நாடு மருந்து கட்டுபாட்டு வலைதளமான www.tndrugscontrol.gov.in என்ற தளத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்