18 வயது மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி செலுத்த இயலாது - ராதாகிருஷ்ணன் விளக்கம்

 


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு கையிருப்பு இல்லாததால் 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு திட்டமிட்டபடி நாளை முதல் தடுப்பூசி செலுத்த இயலாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே ஒன்றாம் தேதியில் இருந்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கடந்த புதன்கிழமை முதல் கோ-வின், ஆரோக்கிய சேது செயலிகள் வாயிலாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்து தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. மாநில அரசுகளுக்கு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் போதிய தடுப்பூசியை வழங்காததால், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவது தாமதமாகும் நிலைஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்யும் செயலியிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எங்கு, எப்போது, என்றைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற எந்த விவரமும் இடம்பெறாததால், பயனாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனினும் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட லட்சுமிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 5-ம் தேதிக்கு பின் தடுப்பூசி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒன்றரை கோடி டோஸ் ஆர்டர் கொடுத்திருப்பதாகவும், ஆனால், மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எந்த பதிலும் பெறப்படவில்லை என்று தெரிவித்தார். எனவே, 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு திட்டமிட்டபடி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதேபோன்று டெல்லியில் கொரோனா தடுப்பூசிகள் தற்போதைக்கு இல்லை என்றும் மையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடகாவிற்கும் ஒரு கோடி டோஸ் வழங்க ஆர்டர் கொடுக்கப்பட்ட நிலையில், இதுவரை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றும், எனவே பயனாளர்கள் மருத்துவமனைகளுக்கு வர வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அறிவுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா, கோவா, மத்தியபிரதேசம், குஜராத், பஞ்சாப், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் போதிய அளவு தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால், அம்மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்திய மக்களுக்கு மே மாத தொடக்கத்தில் செலுத்தப்படும் என்று ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.