நெஞ்சைப் பதற வைக்கும் நாமக்கல் சம்பவம் சிறுமிக்கு நேர்ந்த பெருங்கொடுமை; தாய் உட்பட 13 பேர் கைது




நாமக்கல் அருகே, 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்காள் கணவர், பிஎஸ்என்எல் ஊழியர் உள்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 55). இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 45). தறித் தொழிலாளிகள். இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள்கள் இருவருக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் உள்ளூரிலேயே வசிக்கின்றனர்.


இவர்களுடைய மூத்த மகள் வேணி. இவருடைய கணவர் சின்ராஜ். பத்மநாபன் - மகேஸ்வரி தம்பதியின் கடைசி மகள் சுவாதி (14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணேசனுக்கு உடல்நலம் குன்றி படுத்தப் படுக்கையாக இருப்பதால், அவரை பார்த்துக் கொள்வதற்காக சுவாதி, 6- ஆம் வகுப்புடன் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். இதையடுத்து கடந்த 2 ஆண்டாக உள்ளூரில் எம்ஜிஆர் நகர், சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சில வீடுகளில் வேலை செய்து வருகிறார்.


இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சுவாதியின் உடல்நலம் மோசமானது. அவருடைய அக்காள் வேணி நேரில் வந்து விசாரித்தபோதுதான் தங்கையை காமுகர்கள் ஈவிரக்கமின்றி பாலியல் வன்முறை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன.


வேணியின் கணவர் சின்ராஜ், மனைவியின் தங்கை... அதுவும் சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் அதிர்ச்சியான விவகாரம் தெரிய வந்துள்ளது. மேலும், இதுகுறித்து நண்பர்கள் மத்தியில் பெருமையாகச் சொல்லி வந்துள்ள சின்ராஜ், தன் நண்பர்களுக்கும் சிறுமியை இரையாக்கி இருக்கிறார். இந்த கொடூரச் சம்பவம் எல்லாம் சிறுமிக்கு 12 வயது ஆக இருக்கும்போது இருந்தே நடந்துவந்துள்ளது.


அக்காள் கணவரின் போக்கு நாளடைவில் பிடிக்காமல் போகவே, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த, குமாரபாளையம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வரும் கண்ணன் என்பவர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.


கண்ணனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. என்றாலும் கண்ணனும் சிறுமியை விட்டுவைக்கவில்லை. மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் எல்லாம் சிறுமியை மிரட்டி மிரட்டியே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.


அவரும் தன் நண்பர்களுக்கு, சிறுமியை இரையாக்கிய கொடூரங்களும் நடந்துள்ளன. இதையெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொண்ட சிறுமியின் அக்காள் வேணி, இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லப்போக, அவர்களுக்கு மகளுக்கு இப்படியொரு கொடூரங்கள் நடந்ததே தெரியாமல் இருந்திருக்கிறார்கள்.


மேலும், சின்ராஜின் நண்பர் குமார்தான் அடிக்கடி சிறுமியை நாசப்படுத்தி இருக்கிறார். முதலில் அவர் மீது புகார் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால் சுதாரித்துக்கொண்ட குமாரும் சின்ராஜும், காவல்துறையில் புகார் அளித்தால் மூத்த மகள் வாழாவெட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்று அப்பாவி பெற்றோரை மிரட்டியுள்ளனர்.


இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமார் 10 ஆயிரம் ரூபாயை சிறுமியின் தாயிடம் கொடுத்துள்ளார். அப்போது படுத்தப் படுக்கையாக இருந்த கணவனின் வைத்திய செலவுக்குப் பணம் தேவை என்பதால் மகேஸ்வரியும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு காவல்துறையில் புகார் செய்யாமல் விட்டுவிட்டார். இந்த விவகாரத்தை மகேஸ்வரி, சின்ராஜ், குமார் ஆகிய மூவரும், யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளனர்.


ஆனாலும் இதையெல்லாம் கடந்த பிப்ரவரி மாதம் தெரிந்துகொண்ட வேணி, கணவரே தன் தங்கையை சூறையாடியதைக் கண்டு பொறுக்க முடியாமல், நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியாவிடம் புகார் அளித்துள்ளார். அதன்பிறகே இந்தச் சம்பவம் தீவிர விசாரணைக்கு வந்துள்ளது.


உடனடியாக சைல்டு லைன் மூலமாக, பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறாள். கடந்த 50 நாள்களுக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்திய ரஞ்சிதா பிரியா, கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தார்.


காவல் ஆய்வாளர் ஹேமாவதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில், சிறுமியை 12 பேர் பாலியல் வல்லுறவு செய்திருப்பது தெரியவந்தது.


இதையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவளது அக்காள் கணவர் சின்ராஜ் (வயது 35), பிஎஸ்என்எல் ஊழியர் கண்ணன் (வயது 35), குமார் (வயது 29), வடிவேல் (வயது 29), பன்னீர் (வயது 32), மூர்த்தி (வயது 55), சேகர் என்கிற நாய் சேகர் (வயது 25), கோபி (வயது 32), அபிமன்னன் (வயது 32), சரவணன் (வயது 30), சங்கர் (வயது 30) ஆகியோரை ஏப். 13- ஆம் தேதி கைது செய்தனர். முருகன் (வயது 35) மட்டும் தலைமறைவாக இருந்தார். அவரையும் புதன்கிழமை (ஏப். 14) கைது செய்தனர்.


மேலும், குற்றம் எனத் தெரிந்தும் சிறுமியின் தாயார் மகேஸ்வரி குற்றத்தை மறைக்கும் நோக்கில் குமாரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டதால் அவரையும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்த்து, கைது செய்திருக்கிறது காவல்துறை. அவருடன் சேர்த்து மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


கைதான அனைவரையும் நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் புதன்கிழமை காலையில் ஆஜர்படுத்தினர். அடையாள அணிவகுப்பு நடத்தும்போது சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் முகமும் முழுமையாகத் தெரியாதபடி தலையோடு சேர்த்து முகமூடி அணிவித்து அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின்பேரில், அவர்கள் அனைவரும் நாமக்கல் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுகுறித்து காவல் ஆய்வாளர் ஹேமாவதியிடம் கேட்டபோது, ''எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக புகார் வந்த 5 மணி நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் 11 பேரை கைது செய்து விட்டோம். தலைமறைவாக இருந்த ஒருவரையும் மறுநாள் கைது செய்துவிட்டோம். குற்றத்தை மறைத்ததால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரையும் கைது செய்திருக்கிறோம்.


பெற்றோரிடம் அன்பும் அரவணைப்பும் கிடைக்காதபோது தன் அக்காவின் கணவர்தானே என அவரை நம்பிப் பழகியிருக்கிறாள். சிறுமியின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்ட அவளது அக்காள் கணவர் சின்ராஜ், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் சிறுமியின் அறியாமையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவளை நாசப்படுத்தி இருக்கின்றனர். சிறுமிக்குப் பணமோ அல்லது துணிமணிகள் போன்ற பொருளாசையோ காட்டப்பட்டதாக தெரியவில்லை'' என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)