10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை


 

நாமக்கல் அருகே பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பெண் சிசு கொலையா என சடலத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சேர்ந்த சூர்யா - கஸ்தூரி தம்பதியருக்கு கடந்த 4-ம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கஸ்தூரி தனது குழந்தையுடன் தனது தாய் வீடான பொட்டிரெட்டி பட்டியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி குழந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டதாகக்கூறி சடலத்தை அப்பகுதியிலேயே உறவினர்கள் புதைத்து விட்டனர். குழந்தை இறப்பு குறித்து சந்தேகமடைந்த சுகாதாரத் துறையினர் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் லலிதா, எருமப்பட்டி காவல் நிலையத்தில் குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டியும் புகார் அளித்தார்.

இதனையடுத்து கஸ்தூரியின் தாய் வீடான பொட்டிரெட்டிபட்டியில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி சடலத்தை எடுத்த போலீசார் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.