வென்டிலேட்டர் கிடைக்காமல் 10 நாட்களில் 6 பத்திரிகையாளர்கள் பலி

 


கரோனாவால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர் கிடைக்காமல் 10 தினங்களில் 6 பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர்.

இந்த ஆறு பத்திரிகையாளர்களுக்கும் தொற்று ஏற்பட்டவுடன், மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேர்க்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிலர் தங்கள் சொந்த முயற்சியில் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்தும் அதற்கான வென்டிலேட்டர் கிடைக்காமல் இருந்துள்ளனர்.

லக்னோவின் ‘ஜதீத் அமல்’ உருது பத்திரிகையின் செய்தியாளாரான சச்சிதானந்த் குப்தா கடந்த 14-ம் தேதி காலமானார். இதன் பின்னணியில் அவருக்கு வென்டிலேட்டர் கிடைக்காதது காரணமாகி உள்ளது.

இதேபோன்ற பிரச்சினையால், லக்னோவின் மூத்த பத்திரிகையாளரான வினய் ஸ்ரீவாத்ஸவாவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார். உதவி கேட்டு, தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது ஊடகப் பிரிவினருக்கு ட்வீட் செய்து கொண்டிருந்தார். இதற்கான உதவி கிடைப்பதற்குள் வினய், பரிதாபமாக பலியாகிவிட்டார்.

‘பயனியர்’ ஆங்கிலே நாளேட்டின் அரசியல் செய்திப் பிரிவின் பொறுப்பாளரான தவிஷி ஸ்ரீவாத்ஸவாவிற்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இவருக்கு ஏப்ரல் 18-ம் தேதி அவசரமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்பட்ட து. இதற்காக சக செய்தியாளர்கள் பல மணி நேரம் முயன்று பெற்றனர். தவிஷியை மருத்துவமனையில் அனுமதிக்க டெல்லியின் மூத்த பத்திரிகையாளர் தன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டி இருந்தது.

இதன் பலனாக, லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் தவிஷி சேர்க்கப்படுவதற்குள் அவர் பரிதாபமாக பலியானார். மற்றொரு இளம் பத்திரிகையாளரான பவண் மிஸ்ராவிற்குத் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார். எனினும், பவணுக்குத் தேவைப்பட்ட வென்டிலேட்டர் கிடைக்காமல் அவர் இரு தினங்களுக்கு முன் பலியானார். இந்தத் தகவலை அவரது குடும்பத்தார் தெரிவித்துளனர்.

ஒரு வாரமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட அங்கிட் சுக்லா (32), கடந்த புதன்கிழமை பலியானார். கரோனா, உ.பி. அரசு அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் குழுவின் நிர்வாகக் குழுவிற்கு புதிதாகத் தேர்வான பிரோமத் ஸ்ரீவாத்ஸவாவையும் (42) விட்டுவைக்கவில்லை.

மேலும், சுமார் 15 பத்திரிகையாளர்கள் லக்னோவில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்திரிகையாளர்களின் உறவினர்கள் சுமார் 20 பேரும் கரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பத்திரிகையாளர் சங்கத்தினர் மூலம் முதல்வர் யோகிக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், பத்திரிகையாளர்களை கரோனா போராளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இவர்களில் பாதிக்கப்படுபவர்களுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனியாகப் படுக்கைகள் ஒதுக்குவதில் முன்னுரிமை வழங்கவும் கோரியுள்ளனர். இதற்கிடையே லக்னோ தவிர்த்து உ.பி.யின் மற்ற மாவட்டங்களில் பத்திரிகையாளர்களின் பாதிப்பு கணக்கில் வரவில்லை.

மேற்கு வங்கத் தேர்தல் பணியில் 40 பேருக்குத் தொற்று

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதன் செய்திகளைச் சேகரிக்க அம்மாநிலப் பத்திரிகையாளர்களுடன் டெல்லியில் இருந்தும் பலர் சிறப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இவர்கள் அனைவரையும் சேர்த்து சுமார் 40 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சையில் உள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்