எம்.எல்.ஏ மகன் காரிலிருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் முசிறி எம்.எல்.ஏ செல்வராஜ் காரில் ₹ 1 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.கவினரிடம் கொள்ளையடித்து ₹ 2 கோடியுடன் தப்பிய ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திலிபன், சுரேஷ், ராஜ்குமார் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில், கடந்த, 23ம் தேதி, இரண்டு கார்களில் வந்தவர்கள் சாலையோரம் நின்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தேர்தல் அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும் படையினரைப் பார்த்ததும், ஒரு காரில் இருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
மற்றொரு காரில் வந்த, 4 பேரைப் பிடித்து பறக்கும் படையினரை விசாரித்தனர். அப்போது, ஒரு சாக்கு மூட்டையைக் கைப்பற்றிப் பிரித்துப் பார்த்தபோது, அதில் 500 ரூபாய் நோட்டுகளாக, ₹.1 கோடி பணம் இருந்தது. இதையடுத்து, பண மூட்டையைக் கைப்பற்றிய பறக்கும் படையினர், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
மேலும், காரில் வந்த 4 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் முசிறியைச் சேர்ந்த, அ.தி.மு.க பிரமுகர்களான ரவிச்சந்திரன் (55), 11-வது கிளைச் செயலாளர் சத்தியராஜா(43), எம்.ஜி,ஆர் இளைஞரணிச் செயலாளர் ஜெயசீலன்(46), டிரைவர் சிவகுமார் (36) என்று தெரியவந்தது. பிடிபட்ட கார், முசிறி தொகுதியின் எம்.எல்.ஏவும், தற்போதைய அ.தி.மு.க வேட்பாளருமான செல்வராசுவின் மகன் ராமமூர்த்திக்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
இந்தப் பணத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. சாலையோரம் கிடந்த பணம் என்று 4 பேரும் கூறியதால், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, உரிமை கோராத பணம் தொடர்பாக பெட்டவாய்த்தலை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், 'முறையாக விசாரணை நடத்தவில்லை, தேர்தல் ஆணையத்துக்கு உரிய நேரத்தில் தகவல் அளிக்கவில்லை' என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜன், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினி, காவல் கண்காணிப்பாளராக மயில்வாகனன் நியமிக்கப்பட்டனர். அதன்பின், மயில்வாகனன் மேற்பார்வையிலான தனிப்படை போலீஸார், பணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பெட்டவாய்த்தலையில் கேட்பாரற்றுப் பணம் கிடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, தற்போது கொள்ளை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார், சுரேஷ், ராஜ்குமார், சிவா, மணிகண்டன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பறக்கும் படையினரால் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில் இருந்து, மேலும் 2 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
பணத்தை கொள்ளையடித்தபோதுதான் பறக்கும் படை சென்றதாகவும், பறக்கும் படை வாகனத்தைப் பார்த்து கொள்ளைக் கும்பல் கிடைத்த பணத்தோடு தப்பியதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க நிர்வாகி ஒருவருக்கும், பிரபல ரவுடி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 'கேட்பாரற்றுக் கிடந்ததாக கூறப்பட்ட பணத்தைக் கொண்டு வந்தது அ.தி.மு.கவினர் எனவும், அவர்கள் காரில் பணம் கொண்டு செல்லும் தகவலறிந்த ரவுடி கும்பல், அ.தி.மு.கவினரை வழிமறித்துக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.